2011-11-14 15:18:36

நவம்பர் 15 வாழ்ந்தவர் வழியில்.... வினோபா பாவே


வினோபாஜி என இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட வினோபா பாவே, இந்திய பூமிதான இயக்கத்தின் தந்தை, இந்தியாவின் தேசிய ஆசிரியர், எழுத்தாளர், சிந்தனையாளர், அறப்போராளி மற்றும் மனித உரிமை ஆர்வலர். இந்தியாவின் மற்றொரு மகாத்மாவாக உலகத்தவரால் போற்றப்பட்டவர். மகாத்மா காந்தியின் ஆன்மீக வாரிசாகவும் கருதப்படுபவர். விநாயக் நரகரி பாவே (Vinayak Narahari Bhave) என்ற இயற்பெயரைக் கொண்ட வினோபா பாவே, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் காகோடே (Gagode) எனும் கிராமத்தில் ஒரு பக்தியுள்ள இந்துக் குடும்பத்தில் 1895ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பிறந்தார். 1918ம் ஆண்டில் இளம் வயதிலேயே இவர் தனது தாய் ருக்மினி தேவியை இழந்தார். இவர் ஒருமுறை தனது தாயைப் பற்றிச் சொல்லிய போது, “தன்னைப் பக்தியிலும் ஆன்மீகத்திலும் உருவாக்கியதில் தனது தாய் ஆற்றிய பங்குக்கு வேறு எதுவுமே ஈடாகாது” என்று கூறியிருக்கிறார். இவரைப் போலவே இவரது இரண்டு சகோதரர்களும் (பால்கோபா பாவே, சிவாஜி பாவே) திருமணம் செய்து கொள்ளாமல் சமூகநலப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் காந்திஜியோடு இணைந்து செயல்பட்ட வினோபா பாவே, 1932ம் ஆண்டில் சிறை சென்றார். அந்தச் சிறை வாழ்வில் தன்னோடு இருந்த மற்ற கைதிகளுக்கு மராட்டியத்தில் கீதை சொற்பொழிவுகள் ஆற்றினார். இவர் நிகழ்த்திய மிகவும் உன்னதமான இந்த உரைகள் பின்னாளில், “கீதைச் சொற்பொழிவுகள்” என்ற பெயரில் புத்தகமாக வெளி வந்தன. பின்னர் இப்புத்தகம் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல மொழிகளில் வெளியிடப்பட்டன. மேலும், கிறிஸ்தவப் போதனைகளின் சாரம், குரான் புனித நூலின் சாரம், கல்வி பற்றிய சிந்தனைகள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். வினோபா பாவே விடலைப் பருவத்தில் எடுத்த கன்னிமை உறுதிமொழியையும் அது குறித்தக் கோட்பாடுகளையும் கண்டு காந்திஜி மிகவும் வியந்து மதித்தார் எனச் சொல்லப்படுகிறது. சாதாரண ஒரு கிராமத்தவராக வாழ்ந்த வினோபா பாவே, தான் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு ஆழமான ஆன்மீகத்தால் தீர்வு காண முயற்சித்தார். இதுவே அவர் சர்வோதய இயக்கத்தை உருவாக்கக் காரணமானது. ஒருசமயம் 40 தலித் குடும்பங்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளைக் கண்ட இவர், 1951ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி போச்சம்பள்ளி என்ற ஊரில் பூமிதான இயக்கத்தைத் தொடங்கினார். 13 ஆண்டுகள் இந்தியா முழுவதும் நடந்தே சென்று மக்களிடம், தன்னை அவர்களின் ஒரு மகனாக நோக்கும்படிச் சொல்லி நிலங்களைத் தானமாகப் பெற்று ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். மக்களும் தங்களின் நிலங்களில் ஏழில் ஒரு பகுதியைக் கொடுத்தனர். இதன்மூலம் நன்கொடை என்ற வடிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களைப் பெற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். தமிழ்நாட்டில் மட்டும் 175 கிராமங்களைத் தானமாகப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஆறு ஆசிரமங்களை உருவாக்கியிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக்கில் வினோபா பாவே பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இவர் 1958ம் ஆண்டில் இரமோன் மகசேசே விருதைப் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் நபர் இவர் ஆவார். வினோபா பாவே நோய்வாய்ப்பட்டு 1982ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி காலமானார். இவரது இறுதிச் சடங்கில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டார். இந்தியாவின் உயரிய விருதான பாரத இரத்னா விருது, வினோபா பாவே இறந்த பின்னர் 1983ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டது.
“ஒரு நாடு ஆயுதங்களால் அல்ல, மாறாக, அறநெறி நடத்தையால் தன்னைப் பாதுகாக்க வேண்டும்”.
“ஒரு காரியம் உண்மையாய் இருக்கும் போது அதை நிலைநிறுத்த விவாதங்களைப் பயன்படுத்த வேண்டுமென்ற தேவை கிடையாது”. இக்கூற்றுக்களைச் சொன்னவர் வினோபா பாவே.







All the contents on this site are copyrighted ©.