2011-11-14 15:37:59

திருத்தந்தை : நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் நமது தனிச் சொத்து என்று எண்ணுவது தவறு


நவ.14,2011. கடவுள் மனிதர்களுக்கு வாழ்வையும் திறமைகளையும் அளித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணிகளையும் ஒப்படைக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுடன் பகிர்ந்து கொண்ட இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் நமது தனிச் சொத்து என்று எண்ணுவது தவறு என்று திருத்தந்தை கூறினார்.
இஞ்ஞாயிறு திருப்பலிக்கென தரப்பட்டிருந்த தாலந்து உவமையை தன் உரையின் மையப்பொருளாகக் கொண்டு திருத்தந்தை சிந்தனைகளை வழங்கியபோது, மண்ணுலகில் நாம் அனைவருமே பயணிகள் என்பதையும் இந்தப் பயணத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளை சரியான முறையில் பயன்படுத்துவதே அனைவரின் கடமை என்றும் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
மனிதர்களுக்கு இறைவன் தந்துள்ள கொடைகளிலேயே மிக உயர்ந்த கொடை அன்பு என்றும், இந்த நற்கொடையைத் தவற விடுபவர்கள் வெளி இருளில் தள்ளப்படுவர் என்றும் திருத்தந்தை பெரிய கிரகரி கூறிய வார்த்தைகளை தன் உரையில் நினைவுபடுத்தியத் திருத்தந்தை, பிறரன்பு என்ற கொடையை தவறாமல் பயன்படுத்துவதன் மூலமே நாம் இறைவனின் முழு மகிழ்வில் பங்கேற்க முடியும் என்று கூறினார்.
இஞ்ஞாயிறன்று ஜெர்மனியில் அருளாளராக உயர்த்தப்பட்ட மறைசாட்சியும் குருவுமான Carl Lampert, இருள் நிறைந்த சோசியலிச நாட்களில் ஓர் அணையா விளக்காகத் திகழ்ந்தார் என்று மூவேளை செபத்தின் இறுதியில் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.