2011-11-12 15:33:54

நவம்பர் 13, வாழ்ந்தவர் (வாழ்கின்றவர்) வழியில்... பின்னணிப் பாடகர் பி.சுசிலா


வாழ்ந்தவர் வழியில் என்ற இந்தப் பகுதியில் வாழ்ந்து சென்றவர்களை மட்டும் நாம் நினைப்பதில்லை. நம்முடன் இன்றும் வாழ்ந்துவரும் பல புகழ்பெற்றவர்களையும் எண்ணிப் பார்க்கிறோம். அந்தக் கண்ணோட்டத்துடன் இன்று நாம் சிந்திக்க இருப்பது இன்னிசை அரசி (Melody Queen) என்று புகழ் பெற்ற பின்னணிப் பாடகர் பி.சுசிலா.
மொழி தெரியாதவர்களும் தென்னிந்தியத் திரைப்படப் பாடல்களை உலகின் பல நாடுகளில் கேட்டு இரசிக்கும் வண்ணம், தன் குரலால் திரைப்பட உலகை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வருபவர் இன்னிசை அரசி பி.சுசிலா.
இவர் 1935ம் ஆண்டு நவம்பர் 13ம் நாள் மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட பகுதியில் விஜயநகரம் எனுமிடத்தில் பிறந்தார். 1950ம் ஆண்டு சென்னை வானொலியில் பாடத் தொடங்கிய இவர், விரைவில் திரைப் படங்களில் தன் குரல் வளத்தால் வரலாறு ஒன்றை எழுத ஆரம்பித்தார். 3000க்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் பாடியுள்ள பக்திப்பாடல்களையும் இணைத்தால், இந்த எண்ணிக்கை இன்னும் பல ஆயிரம் கூடும்.
தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அதிகப் பாடல்களைப் பாடியுள்ள இவர், இந்தி, வங்காளம், ஒரியா, துளு, சிங்களம் ஆகிய மொழிகளிலும், படகா என்ற பழங்குடியினரின் மொழியிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
'உயர்ந்த மனிதன்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "நாளை இந்த வேளை பார்த்து" என்ற மிக அழகான பாடலைப் பாடி 1969ம் ஆண்டு இவர் முதன் முறையாக தேசிய விருதைப் பெற்றார். பின்னர் தொடர்ந்து இந்த விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் விருதுகளை 12 முறை பெற்றுள்ள இவர், தமிழக அரசின் 'கலைமாமணி' விருதையும் பெற்றுள்ளார். இந்த விருதுகளின் சிகரமாக, 2008ம் ஆண்டு இவர் இந்திய அரசின் பத்ம பூஷன் என்ற உயரிய விருதையும் பெற்றுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.