2011-11-11 15:23:59

திருத்தந்தை : கிறிஸ்தவர்களுக்குத் தன்னார்வப்பணி என்பது கிறிஸ்துவைத் தங்களது தனிப்பட்ட வாழ்வில் அனுபவிப்பதை அடிப்படையாகக் கொண்டது


நவ.11,2011. கிறிஸ்தவர்களுக்குத் தன்னார்வப்பணி என்பது நன்மனத்தின் வெறும் வெளிப்பாடு மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கு முதலில் பணிவிடை செய்த கிறிஸ்துவைத் தங்களது தனிப்பட்ட வாழ்வில் அனுபவிப்பதை அடிப்படையாகக் கொண்டது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐரோப்பியத் தன்னார்வப்பணியாளர் ஆண்டு, இந்த 2011ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, “Cor Unum” என்ற திருப்பீடப் பிறரன்பு அவை வத்திக்கானில் நடத்திய இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 150 பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
பிறரை அன்பு கூருவதற்குரிய நம்மிலுள்ள அடிப்படையான அழைப்பைக் கண்டு கொள்வதற்கு கிறிஸ்துவின் திருவருளே நமக்கு உதவுகின்றது என்று கூறிய திருத்தந்தை, மனிதத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் செய்யும் சிறிய செயலானது, கிறிஸ்துவின் அன்பு மற்றும் அவரின் பிரசன்னத்தின் அடையாளமாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் பொது வாழ்வில் ஊக்கமுடன் பங்கு கொண்டு உண்மையான சுதந்திரம், நீதி, ஒருமைப்பாடு ஆகிய பண்புகளால் குறிக்கப்படும் சமுதாயத்தை உருவாக்கும் வழிகளை அதிகமதிகமாகத் தேட வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
இளையோர், தன்னார்வப்பணிகளில் வளரவும் அவர்கள் கிறிஸ்துவின் குரலைத் தங்கள் இதயங்களில் கேட்கவும் அவர்களை ஊக்கப்படுத்துமாறும் திருத்தந்தை, இக்கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டமானது நவம்பர் 10,11 தேதிகளில் நடைபெற்றது.







All the contents on this site are copyrighted ©.