2011-11-10 16:21:11

பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் பாடப் புத்தகங்களில் சிறுபான்மை மதத்தவருக்கு எதிரான பகைமையை வளர்க்கும் எண்ணங்கள்


நவ.10,2011. பாகிஸ்தானில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பாடப் புத்தகங்களில் சிறுபான்மை மதத்தவருக்கு எதிரான, சகிப்புத் தன்மையற்ற வழிகளில் பகைமையை வளர்க்கும் எண்ணங்கள் இடம்பெற்றுள்ளன என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஓர் அறிக்கை கூறுகிறது.
அகில உலகில் நிலவும் சமயச் சுதந்திரம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுக் கழகம் இப்புதனன்று வாஷிங்டனில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாகிஸ்தான் மாணவர்களிடையே சகிப்புத் தன்மையைக் குறைக்கும் வகையில் பள்ளிப்பாடங்கள் அமைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
‘பாகிஸ்தானில் கல்வியும் மதப் பாகுபாடுகளும்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயன்படுத்தப்படும் 100 பாடப்புத்தங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் ஈடுபட்டோர் 37 அரசுப் பள்ளிகளையும், 19 இஸ்லாமியப் பள்ளிகளையும் பார்வையிட்டு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களைச் சந்தித்துள்ளனர்.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் ஆகிய அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் பற்றி கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் இம்மதத்தினரைப் பற்றி குறைவான மதிப்பை மாணவர்கள் மத்தியில் விதைக்கின்றன என்றும், பாகிஸ்தான் நாட்டின் சமுதாயம், கலாச்சாரம் ஆகியத் துறைகளில் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் ஆற்றியுள்ளப் பணிகளைக் குறித்து எந்தக் குறிப்புக்களும் பாடப்புத்தகங்களில் இடம்பெறவில்லை என்றும் இவ்வாய்வில் தெரிய வந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.