2011-11-10 16:15:37

திருப்பீடப் பேச்சாளர் : 2012ம் ஆண்டில் மெக்சிகோவுக்கும் கியுபாவுக்கும் திருப்பயணம் செல்லத் திருத்தந்தை திட்டம்


நவ.10,2011. 2012ம் ஆண்டு வசந்த காலத்தில் மெக்சிகோவுக்கும் கியுபாவுக்கும் திருப்பயணம் மேற்கொள்ளும் தெளிவான திட்டம் குறித்து திருத்தந்தை பரிசீலித்து வருவதாகத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்.
மெக்சிகோ மற்றும் கியுபாவுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வது குறித்து இவ்வியாழனன்று நிருபர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அருள்தந்தை லொம்பார்தி, இப்பயணம் பற்றி இவ்விரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கும் பொறுப்பு அந்நாடுகளின் திருப்பீடத் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
பிரேசில் நாட்டுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொண்டார், இலத்தீன் அமெரிக்காவில் இஸ்பானிய மொழி பேசும் நாடுகளும் தங்களது நாடுகளுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றன என்றும் அவர் கூறினார்.
அடுத்த ஆண்டில் திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள இத்திருப்பயணம், கியுபாவில் Cobre நமதன்னைமரி எனும் பிறரன்பு அன்னைமரியா திருவுருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதாய் இருக்கும் என்றும் திருப்பீடப் பேச்சாளர் கூறினார்







All the contents on this site are copyrighted ©.