2011-11-10 16:22:30

குஜராத் கலவரத்தில் 33 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு இயேசு சபை மனித உரிமை ஆர்வலர் வரவேற்பு


நவ.10,2011. குஜராத் மாநிலம் சர்தார்புரா கிராமத்தில் கடந்த 2002ம் ஆண்டுக் கலவரத்தில் 33 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார் இயேசு சபை மனித உரிமை ஆர்வலர் ஒருவர்.
குஜராத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அருள்தந்தை Cedric Prakash, உண்மை மற்றும் நீதியின் சக்கரங்கள் மெதுவாக சுழன்றாலும் அவை, நிச்சயமாக, சரியான திசை நோக்கி நகரும் என்று தெரிவித்தார்.
கடந்த 2002ம் ஆண்டின் கோத்ரா இரயில் எரி்ப்புச் சம்பவத்தையடுத்து நடந்த கலவரத்திற்குப் பயந்து சர்தார்புரா கிராமத்தில் இப்ராஹிம் ஷேக் என்பவரின் வீட்டில் மக்கள் அடைக்கலம் தேடியிருந்தனர். சுமார் 1,500 பேர் அடங்கிய கும்பல் அவ்வீட்டிற்குத் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. அதில், 22 பெண்கள் உள்பட 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
அதுதொடர்பாக நடந்த விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில் 42 பேரை விடுவித்த நீதிமன்றம், 31 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் உட்பட 112 பேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.