2011-11-09 14:48:43

வெறுப்பைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகளுக்கு நைஜீரியாவின் ஆயர்கள் கண்டனம்


நவ.09,2011. சுயநலமிக்க அரசியல் வாதிகள் வளர்த்துவிடும் வெறுப்பாலும், அரசு மற்றும் காவல் துறையின் தவறுகளாலும் அப்பாவி பொது மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்று நைஜீரியாவின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் நைஜீரியாவின் Damaturu மற்றும் Patiskum ஆகிய இரு ஊர்களில் கோவில்களும், மசூதிகளும் தாக்கப்பட்டு, ஏறத்தாழ 100 பேருக்கும் மேல் உயிரிழுந்துள்ளதைக் குறித்து பேசிய Maiduguri ஆயர் Oliver Dashe Doeme இவ்வாறு கூறினார்.
Damaturu என்ற ஊரில் உள்ள அன்னை மரியாவின் ஆலயம் இத்தாக்குதலால் தீக்கிரையாகி, முற்றிலும் தரை மட்டமாகிவிட்டதென்று கூறிய ஆயர் Doeme அப்பகுதியில் உள்ள அரசியல் தலைவர்களே இந்த வன்முறைக்குக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
வன்முறைகள் ஏழ்மையையும், அறியாமையையும் இன்னும் அதிகம் வளர்க்குமே தவிர, அவைகளை நீக்கும் வழிகளைக் காண்பிக்காது என்று Bauchi மறைமாவட்ட ஆயர் Goltok Malachy கூறினார்.
நைஜீரியாவில் பழக்கத்தில் உள்ள மேற்கத்திய கல்வி முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் இஸ்லாமிய பாரம்பரியம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்றும் போராடி வரும் Boko Haram என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு அன்னை மரியா கோவிலைத் தாக்கியதற்கு பொறுபேற்றுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களை முற்றிலும் விரட்டி விட்டு, அப்பகுதியில் Sharia எனப்படும் இஸ்லாமிய பாரம்பரிய வாழ்வு முறையைப் புகுத்த இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களுடன் அரசியல் வாதிகளும் இணைந்துள்ளனர் என்று ஆயர் Doeme சுட்டிக் காட்டினார்.
இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளில் ஊறியுள்ளவர்கள் அரசிலும், காவல் துறையிலும் ஊடுருவி இருப்பதால், அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு உதவிகள் செய்ய மறுத்து வருகின்றனர் என்று ஆயர் Doeme மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.