2011-11-09 14:16:47

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 91


ஒரு இரயிலில் செல்வந்தர் ஒருவரும், துறவி ஒருவரும் பயணம் செய்தார்கள். செல்வந்தர் சாப்பிட ஆரம்பித்ததும் எதிரிலிருந்தத் துறவியைப் பார்த்து, “உழைத்து சாப்பிடமாட்டாயா”? ஒசியிலியே காலத்தை ஓட்டுகிறாயே” என வசைபாடிக்கொண்டே வந்தார். அதற்கு துறவி, “அய்யா நீங்கள் எதுவும் எனக்குத் தர வேண்டாம். இறைவன் எனக்குக் கொடுப்பார்” என்று சொன்னதும், “ஆமா வானத்தில் இருந்து கொட்டும். பொறுக்கிக்கொள்” என கேலி செய்தார். சில நிமிடங்களில் அடுத்த நிறுத்தம் வந்தது. துறவி இறங்கி தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது எங்கிருந்தோ வந்த ஒருவர், துறவியிடம் மிகப்பெரிய உணவுப் பொட்டலம் ஒன்றை தந்தார். அதை வாங்கிய துறவி, அருகிலிருந்த யாசகர்களுக்கு உணவைப் பகிர்ந்து கொடுக்க ஆரம்பித்தார். துறவிக்கு உணவைக் கொண்டு வந்தவர் அதைப் பார்த்ததும், “அய்யா நான் உங்களுக்காகத்தான் இதை கொண்டு வந்தேன். ஆனால் இவர்களுக்கு கொடுக்கிறீர்களே” என்று கேட்டார். ஆனால் துறவியோ “இவர்கள் உண்ட பிறகு எஞ்சுகிற உணவு எனக்குப் போதும்” என தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆனால் உணவு குறையவேயில்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த செல்வந்தர், “இறைவன் தன்னை நம்பி புகலிடம் புகுவோர்க்கு தேவையான பாதுகாப்பையும் பராமரிப்பையும் வழங்குகின்றார் என்பது உண்மைதான்” என்றார். துறவியோ தனக்குள், “இறைவா! நீரே என் புகலிடம்” என்று செபித்துக்கொண்டிருந்தார்.

அன்பார்ந்தவர்களே! நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 91. இத்திருப்பாடல் இறைவனை நம்பி அடைக்கலம் புகுவோரை அவர் அனைத்துத் தீமைகளிலிருந்தும் பாதுகாக்கிறார் என்று சொல்லி, என்னென்ன வழிகளில் இறைவன் பாதுகாத்திருக்கிறார் என்ற நீண்ட பட்டியலையும் தந்து, இறைவனுடைய உடனிருப்பு அவர்களோடு என்றும் இருந்தது என்ற இஸ்ரயேல் மக்களின் வாழ்வு அனுபவத்தையும் விரிவாகச் சொல்கின்றது. எனவே இன்று இத்திருப்பாடலில் சொல்லப்பட்டுள்ள ‘இறைவனை நம்பி அடைக்கலம் புகுவது’ என்ற கருத்தை மட்டும் சிந்திப்போம்.
இறைவனை நம்பி அடைக்கலம் புகுவது என்பது 40 ஏக்கர் நிலம், 2 பங்களாக்கள், போக வர கார், வங்கியில் சேகரித்துள்ள பணம் என எல்லாம் வைத்துக் கொண்டு ‘கடவுளே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்’ என்று சொல்வதல்ல. மாறாக, எவ்வித பாதுகாப்புமின்றி, எவ்வித உத்திரவாதமுமின்றி, எவ்வித நிபந்தனையுமின்றி ‘கடவுளே நீர் தான் என் கதி’ என வருவதுதான் இறைவனில் அடைக்கலம் புகுவது. இதைத் தான் இறைவனிடம் முழுடையாகச் சரண் அடைவது என்று சொல்வார்கள்.

இறைவனை நம்பி அடைக்கலம் புகுவது என்று சொன்னவுடனேயே என் நினைவுக்கு வருவது மாற்கு நற்செய்தி 12ம் பிரிவில் இடம்பெறுகின்ற கைம்பெண்ணின் காணிக்கை. தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் இறைபராமரிப்பில் நம்பிக்கை கொண்டு தன் கையிலிருந்த அனைத்தையும் காணிக்கைப் பெட்டியில் போடும் அந்த கைம்பெண் முழுமையாக இறைவனிடம் சரண் அடைவதற்கு சிறந்த உதாரணம். இயேசுவினுடைய வாழ்வையே எடுத்துக் கொள்வோம். அவருக்கென தங்குவதற்கு வீடு இல்லை, உண்பதற்கு உணவில்லை. உடுத்திக்கொள்ள மாற்று ஆடை கூட இல்லை. அனைத்திற்குமே இறைபராமரிப்பையே நம்பி இருந்தார்.
மத்தேயு 8:6
இயேசு அவரிடம், 'நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'.
இறைபராமரிப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த இயேசு மக்களுக்கு சொன்னவை இதோ:
மத்தேயு 6:26-30
வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!
காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.
ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?

அன்பார்ந்தவர்களே! இத்தகைய இறைபராமரிப்பில் நம்பிக்கை கொண்டு, தங்களை முழுவதுமாக கையளித்து இறைவனில் அடைக்கலம் புகுந்த பல மனிதர்களை நாம் இன்று புனிதர்களாக வணங்குகிறோம். கொல்கத்தா நகர் தெரசா தன் சொந்த நாட்டை, வீட்டை விட்டு இந்தியாவிற்குப் பணிபுரிய வந்தார். அவர் வாழ்ந்த பகுதியில் மக்களின் ஏழ்மையைக் கண்டு, தான் இருந்த துறவகத்தையும் துறந்து அந்த மக்களுக்காக வாழ ஆரம்பித்தார். எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இறைபராமரிப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழத்துவங்கினார். இறைவன் அவரைக் கைவிடவில்லை. இவரைப்போன்றே அசிசி நகர் புனித பிரான்சிஸ், லொயோலா இஞ்ஞாசியார், அலோசியுஸ் கொன்சாகா, பிரான்சிஸ் போர்ஜியா என இறைபராமரிப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்டு தங்கள் சொத்து சுகங்களை துறந்து இறைவனில் அடைக்கலம் புகுந்த புனிதர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இன்று, நம் வாழ்வு எப்படி இருக்கிறது?
முன்பொரு காலத்தில் நாம் பணம் எடுத்துச் செல்லும் பெட்டிகளுக்குப் பூட்டுப் போட்டோம். பிறகு பெட்டியை நாம் பயணம் செய்யும் இரயில் அல்லது பேருந்தில் இருக்கும் கம்பியில் இணைத்துப் பூட்டுப் போட்டோம். இப்போது பணத்தை கையிலேயே எடுத்துச் செல்வதில்லை. எல்லாம் ATM என மாறிவிட்டது. காரணம் எதற்குமே பாதுகாப்பில்லை. நாம் ஓட்டும் வாகனங்களுக்கு காப்பீடு, நாம் வாழும் வீட்டிற்குக் காப்பீடு, நகைக்குக் காப்பீடு, விபத்து ஏற்பட்டால் காப்பீடு, கண், காது, கைகள், கால்கள் எனத் தனி தனி காப்பீடுகள், உயிர் பிரிந்தால் காப்பீடு என தொட்ட தொண்ணூருக்கும் காப்பீடு செலுத்துவது இன்றியமையாததாகி விட்டது. இரண்டு கைபேசிகள், இரண்டு வாகனங்கள், இரண்டு வீடுகள் என எல்லாமே இரண்டு தான். இது இல்லையென்றால் அது என பாதுகாப்பு வசதிகள் பெருகி விட்டன. இப்படி எல்லா வித பாதுகாப்பு வசதிகளையும் கவனமாக செய்யும் நாம் இறைவனில் அடைக்கலம் புகுவதுதான் முக்கியம் என்பதை மறந்துவிடுகிறோம். இதற்காக நாம் செய்யும் பாதுகாப்புக் காரியங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அவை தேவையில்லை எனச் சொல்லவில்லை. இவ்வுலகில் பாதுகாப்பான வாழ்விற்கான நமது முயற்சிகள் தவறில்லை. ஆனால் அனைத்திற்கும் மேலானது இறைபராமரிப்பு என்பதை மறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

இஸ்ரயேல் மக்கள் இறைபராமரிப்பு மற்றும் பாதுகாப்பை தங்கள் வாழ்வு அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்டு இறைவனிடம் தங்களையே முழுமையாகக் கையளித்து அடைக்கலம் புகுந்தனர். இஸ்ரயேல் மக்கள் பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட கடுமையாக போராடினர். பல்வேறு முயற்சிகளைச் செய்தார்கள். சில சமயங்களில் தந்தையாம் இறைவனிடமிருந்து விலகிச்சென்று தங்கள் திறமைகளில் நம்பிக்கை வைத்துப் போராடி, தோல்வியைச் சந்தித்தனர். இறைபராமரிப்பில் நம்பிக்கை கொண்டு முயற்சி செய்யும் போது வெற்றியடைந்ததை, காலப்போக்கில் அறிந்து கொண்டனர். இதைத்தான் இத்திருப்பாடலின் 1,2 மற்றும் 4ம் சொற்றொடர்கள் சொல்கின்றன.
உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்.
ஆண்டவரை நோக்கி, 'நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார்.
அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்.

அன்பார்ந்தவர்களே! நாங்கள் நவதுறவகத்திலே இருந்த போது ஒருநாள் அதிகாலையில் உண்பதற்கோ அல்லது பயணத்திற்கோ எதற்குமே காசு கொடுக்காமல் நீங்களாக வேலை தேடி அன்றைய தேவைக்கு சம்பாதித்துக் கொள்ளுங்கள், மாலை 7 மணிக்குத்தான் இல்லத்திற்கு திரும்ப வரவேண்டும் என்ற அறிவுரையோடு அனுப்பப்பட்டோம். எங்களில் ஏறக்குறைய எல்லாருமே வேலைத்தேடிக் கண்டுபிடித்து அன்றைய நாளின் தேவைக்கானதைச் சம்பாதித்து திரும்பினோம். இதைத்தான் ‘அனாவிம்’ அனுபவம் என்று சொல்வார்கள். ‘அனாவிம்’ என்ற சொல்லுக்கு இறைவன் பேரில் முழுமையான நம்பிக்கைக் கொண்டவர் என்பது பொருள். எவ்வித பாதுகாப்புமின்றி, உத்திரவாதமுமின்றி, இறை பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு நமது முயற்சிகளை மேற்கொள்ளும் போது வெற்றி பெறுகிறோம் என்பது என் வாழ்வு அனுபவித்திலிருந்து நான் அறிந்து கொண்ட உண்மை. இது தான் ‘இறைவனில் அடைக்கலம் புகுவது’ என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.

என்னுடைய வாழ்வு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை நான் செய்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது என் வாழ்வைத் திரும்பிப்பார்க்கும் போது மிகப்பெரிய உண்மை எனக்குப் புலப்படுகிறது. இப்படித்தான் இருக்கவேண்டும் என முடிவு செய்து அதை அடைவதற்காக நான் வலிந்து செய்த முயற்சிகள் பலனின்றி வீணாக முடிந்ததையும், ‘இது என் விருப்பம் ஆனால் உமது விருப்பப்படியே ஆகட்டும்’ என இறைபராமரிப்பில் நம்பிக்கை கொண்ட காரியங்கள் தானாகவே சிறப்பாக நடந்து முடிந்ததையும் என்னால் உணர முடிகின்றது.
நாம் எவ்வித முயற்சியுமே செய்யத் தேவையில்லை என்று சொல்லவில்லை. மாறாக, நமது வாழ்வைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள முயற்சிகளை செய்வோம். அதே சமயம், இறைபராமரிப்பில் முழுமையான நம்பிக்கை கொள்வோம். உம் சிறகுகள் நிழலில் என்னைக் காத்துக் கொள்ளும் என்று சொல்லி, இறைவனில் அடைக்கலம் புகுவோம். இதுவே இத்திருப்பாடல் நமக்குச் சொல்லித் தருகின்ற பாடம்.








All the contents on this site are copyrighted ©.