2011-11-09 14:17:03

நவம்பர் 09, வாழ்ந்தவர் வழியில்... சார்ல் டிகால் (Charles de Gaulle)


சார்ல் டிகால் என்று புகழ்பெற்ற Charles André Joseph Marie de Gaulle, 1890ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி, பிரான்ஸ் நாட்டில் Lille எனுமிடத்தில் செல்வம் மிகுந்த ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.
இவர் பிறந்த 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் நாடு ஓவியம், கவிதை, இசை என்று பல கலைத் துறைகளில் புகழின் உச்சியை அடைந்திருந்தது. விமானம், சினிமா, என்ற கண்டுபிடிப்புகளாலும், சூயஸ் கால்வாய், ஐஃபெல் (Eiffel) கோபுரம் போன்ற அறிவியல் சாதனைகளாலும் சிறந்திருந்தது அந்நாடு.
நாட்டுப் பற்று மிக்க சார்ல் டிகால், இராணுவப் பயிற்சியில் தலை சிறந்து விளங்கினார். முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் இரண்டிலும் இராணுவத்தில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர் மனித வரலாற்றில், மனிதர்கள் மத்தியில் பெரும்பாலும் எதிர்மறையான தாக்கங்களையே விட்டுச் சென்றுள்ளது. இந்தப் போரைக் குறித்து சார்ல் டிகால் நமக்கு விட்டுச் சென்றுள்ள நம்பிக்கை வரிகள் இவை:
“It is not tolerable, it is not possible, that from so much death, so much sacrifice and ruin, so much heroism, a greater and better humanity shall not emerge.”
இத்தனை மரணங்கள், இத்தனைத் தியாகங்கள், அழிவுகள், இவ்வளவு உயர்ந்த வீரம் ஆகியவற்றிலிருந்து ஓர் உயர்ந்த, உன்னதமான மனிதம் பிறக்காமல் போகாது.
இரண்டாம் உலகப் போரின்போது, சார்ல் டிகால் பிரான்ஸ் நாட்டிலிருந்து தப்பித்து, இங்கிலாந்து சென்றார். அங்கிருந்து அவர் 1940ம் ஆண்டு சூன் திங்கள் 18ம் நாள் நாசி அராஜகத்திற்கு எதிராக BBC வானொலியில் வழங்கிய உரை மிகவும் புகழ்பெற்ற ஒன்று.
1958ம் ஆண்டு ஐந்தாம் பிரெஞ்சு குடியரசை நிறுவிய இவர், அக்குடியரசின் அரசுத் தலைவராக 1959ம் ஆண்டிலிருந்து, 1969ம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் பணியாற்றினார். இவர் இராணுவத் தலைமைத் தளபதியாகவும், அரசுத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றதால், அதிகமானத் தொகையொன்று இவருக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இதை அவர் ஏற்க மறுத்து, சாதாரண ஓர் இராணுவத் தலைவனுக்கு வரையறுக்கப்பட்ட ஒய்வூதியத்தையே தன் எஞ்சிய நாட்களில் பெற்று வந்தார்.
பிரான்ஸ் நாட்டின் தலை சிறந்தத் தலைவராகக் கருதப்படும் சார்ல் டிகால், தனது 90வது வயதை நேர்ந்கிக் கொண்டிருந்த வேளையில், 1970ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி திடீரென காலமானார்.








All the contents on this site are copyrighted ©.