2011-11-07 15:37:13

வாரம் ஓர் அலசல் - தலைவர்களே! கேளுங்கள் மக்கள் குரலை!


நவ.07,2011. ஒருசமயம் காந்திஜி மேற்கு வங்காளத்திலுள்ள சோதேபூரில் (Sodepur) தங்கியிருந்தார். அப்போது பலதரப்பட்ட மக்கள் அங்கு இடைவிடாமல் வந்து காந்திஜியைச் சந்தித்து அவரின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்நேரங்களில் சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், இன்னும் சில சமயம் தீண்டாமை ஒழிப்புத் தொடர்பாகவும், மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்தின் சில பெண்கள் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தைக் கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மீது தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா?” என்றார். அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூக ஆர்வலர் சீதாராம் சக்கசேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபுஜி, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய்க் குறைவாகவாத் தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக் கூறினார். உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி அவரிடம், “நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.
ஆம். காந்திஜி போல நாடுகளின் தலைவர்கள் தங்களது பசி, தங்கள் நாட்டின் பசி என்ற உணர்வில் ஆட்சி செய்து வந்தால் அந்த நாடும் அந்நாட்டு மக்களும் எவ்வளவு நன்றாக வாழ்வார்கள், இதை நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் நிறுவனப் பொதுச் செயலர் பான் கி மூன், கடந்த வாரத்தில் “உலகத் தலைவர்களே! உங்கள் மக்களுக்குச் செவி கொடுங்கள். நாடுகளின் தலைவர்களே உங்கள் மக்களின் நம்பிக்கைகளுக்கும் ஏக்கங்களுக்கும் செவி கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். நவம்பர் 3,4 தேதிகளில் பிரான்ஸ் நாட்டு Cannes ல் நடைபெற்ற “உலகின் பெரும் பொருளாதார சக்திகள்” என்று கணிக்கப்படும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்த அழைப்பை அவர் முன்வைத்தார். “உலகப் பொருளாதாரத்தை இருண்ட மேகங்கள் மீண்டும் சூழ்ந்துள்ளன. இந்த மாநாடானது உலக நிதி நெருக்கடியை அகற்றுவதற்கென இடம்பெறும் கடும் போராட்டக் களமாக அமைவதோடு மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கத் திட்டமிடும் வாய்ப்பாக இருக்க வேண்டும். இன்று உலகில் எல்லா இடங்களிலும் வேலையின்மை உயர்ந்து வருகிறது. பொருளாதார சமத்துவமின்மைகள் விரிந்து வருகின்றன. ஏழ்மை அதிகரித்து வருவதால் அது மக்களை, கவலை, கோபம், கடும்வெறுப்பு போன்ற குணங்கள் உள்ளவர்களாக ஆக்குகின்றது. எனவே பெண்களிலும் இளையோரிலும் முதலீடு செய்யுங்கள். ஏனெனில் இவ்வுலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி இளையோரே. நாட்டு மக்களின் நல்வாழ்விலும் நாட்டின் உள்கட்டமைப்பிலும் கல்வியிலும் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே உலகத் தலைவர்களே, தங்களது அடிப்படைத் தேவைகளுக்காக அழுது மடியும் உங்கள் மக்களின் வேண்டுகோள்களுக்குச் செவி கொடுங்கள்” என்று பான் கி மூன் ஜி20 நாடுகளின் தலைவர்களைக் கேட்டார்.
UNDP என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்ட அமைப்பு கடந்த புதனன்று (நவ.03,2011) “மனித முன்னேற்ற அறிக்கை 2011” என்ற தலைப்பில் விரிவான ஓர் அலசலை வெளியிட்டது. “உலகில் இடம் பெறும் வெப்பநிலை மாற்றங்களும், கல்வி, நலவாழ்வு, வருமானம் ஆகியவற்றில் காணப்படும் சமத்துவமின்மைகளும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு கடந்த நாற்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முன்னேற்றத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன” என்று இந்த அறிக்கையை வெளியிட்ட அந்த அமைப்பின் தலைவர் Helen Clark சொல்கிறார். இந்த உலகம் பல சவால்களை எதிர்கொள்கின்றது. சமத்துவமின்மை, வாழ்வாதார விவகாரங்கள் மற்றும் பிற சவால்களை சரிக்கட்டவில்லையெனில் கடந்த நாற்பது ஆண்டுகளில் இவ்வுலகம் கண்ட வளர்ச்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியாது. உலகம் இந்தச் சவால்களுக்குத் தீர்வு காணவில்லையெனில், மனித முன்னேற்ற குறியீட்டில் ஏற்கனவே பின்தங்கி இருக்கும் ஏழை நாடுகளில் சமத்துவமின்மைகள் மேலும் விரிந்து கொண்டே போகும் என்று Clark எச்சரிக்கிறார். செல்வந்தர்-ஏழைகள் இடைவெளிகளும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களும் ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் என்றும் இந்த ஐ.நா.அறிக்கை கூறுகிறது.
ஒரு நாட்டின் நலவாழ்வு, கல்வி, வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் 187 நாடுகளின் நிலைமைகளை ஆய்வு செய்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது UNDP அமைப்பு. இதன்படி, இலங்கை 97வது இடத்திலும், இந்தியா 134வது இடத்திலும், சீனா 101வது இடத்திலும் உள்ளன. அதேசமயம் நார்வே முதலிடத்திலும், பின்னர் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, நியூசிலாந்து, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, சுவீடன் என நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. மேலும், காங்கோ சனநாயகக் குடியரசு, நைஜர், புருண்டி ஆகிய ஆப்ரிக்க நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன.
வழக்கமாக ஒருவர் வாழ்க்கையில் முன்னேறி விட்டார் என்றால் அவரிடமுள்ள பணத்தை வைத்து அவரது வாழ்க்கை வசதிகளை வைத்துச் சொல்கிறோம். ஒரு நாடு வளர்ச்சியடைந்து விட்டது என்றால் அந்நாட்டினர் எல்லாரும் அனுபவிக்கும் நலவாழ்வு வசதிகள், கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றை வைத்துக் கணிக்கிறோம். அத்தகையதொரு நாட்டில் குடிமக்கள் மாண்புடன் வாழ்வார்கள். அவர்களுக்குச் சமூகத்தில் பாதுகாப்பு இருக்கும். தலைவர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அந்த நாட்டைப் பாதிக்கும் தீர்மானங்களில் எல்லாரும் பங்கு கொள்வார்கள். இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாகச் சொன்னால், மனித முன்னேற்றம் என்பது, மக்களின் முன்னேற்றம், மக்களுக்கான முன்னேற்றம், மக்கள் முன்னேற்றம் ஆகும். இந்த மாதிரியான நிலைகள் இல்லாத ஒரு நாட்டில் மனித முன்னேற்றம் பின்தங்கிய நிலையிலே இருக்கும். பசியும் பட்டினியும் நோயும் வேதனையும் சண்டையும் சச்சரவுகளும் வன்முறையும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
கடந்த சில நாட்களாக பல நாடுகளில் பெய்யும் கனத்த மழையினால் மக்களின் அன்றாட வாழ்வு ஆதாரங்களும் தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் மேற்கு இத்தாலியில் ஜெனோவா நகர் உட்பட பல பகுதிகள் புயல் மற்றும் கனமழையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதைத் தொலைக்காட்சியில் பார்க்கவே மனது கஷ்டப்படுகின்றது. திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் துன்புறும் ஜெனோவா மக்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
RealAudioMP3 கனமழையின் பாதிப்பால் பாங்காக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நகரைவிட்டு வெளியேறி விட்டனர். தமிழகத்தில் 29 விழுக்காடு கூடுதல் மழை. இலங்கையிலும் பாதிப்பு. இந்தப் பாதிப்புக்களுக்கு, உலகின் வெப்பநிலை மாற்றமும், சுற்றுச்சூழல் பாதிப்பும் தானே காரணம். உலகில் காடுகளை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதையும் விடுத்து, 1990ம் ஆண்டிலிருந்து 30 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இந்த அழிவுக்கு, அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் தொகை பெருக்கமே காரணம் என்று ஐ.நா.கூறுகின்றது. UNEP என்ற ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் அறிக்கையின்படி, உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியுள்ளது, நகர மக்கள் தொகையும் 45 விழுக்காடு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்புக்குக் காரணம் என்றும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

“உலகில் மக்கள் முன்னேற்றம்” பின்னடைவு காண்பதற்கு வெப்பநிலை மாற்றமும் சமத்துவமின்மைகளும் காரணம் என்று 2011ம் ஆண்டின் “மனித முன்னேற்றம்” பற்றிய அறிக்கை சொல்கிறது. உலகில் ஓர் ஆண்டில் அறுபது இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இழக்கப்படுகின்றது. 2 கோடியே 40 இலட்சம் டன் மண் அரிப்பு ஏற்படுகிறது. ஒரு கோடியே 50 இலட்சம் ஏக்கர் வேளாண் விளைநிலங்கள், அதிகபட்ச பயன்பாட்டினாலும் தரமற்ற வகையில் கையாளப்படுவதாலும் இழக்கப்படுகின்றன. பாலைவனமாக மாறும் நிலங்களின் அளவும் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தின் விளைநிலங்களில் சுமார் 60 விழுக்காடுவரை விலை நிலங்களாகி அவை வீட்டுமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களாக மாறியிருப்பதாக ஓர் ஊடகச் செய்திக் கூறுகின்றது. தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகள் இன்று விவசாயமே செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்களாம். இந்நிலையில் உணவு உற்பத்திக்கான வாய்ப்புக்களை எவ்வாறு அதிகரிக்க முடியும்?.

உலகத் தலைவர்களே! உங்கள் மக்கள் எழுப்பும் குரல்களைக் கேட்பீர்களா, வருங்காலத் தலைமுறையினரின் முன்னேற்றம் உங்கள் கைகளில் உள்ளது. நீங்கள் எடுக்கும் தீர்மானங்களால், நீங்கள் இயற்றும் சட்டங்களால், உங்களது கொள்கைகளால் மட்டுமே, சுற்றுச்சூழலை மேலும் மாசு அடையாமல் காப்பாற்ற முடியும். ஒருசமயம் இரண்டு ஞானிகள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் சொற்போர் மும்முரமாகியது. இதைப் பார்த்த குயில் ஒன்று, அடுத்த குயிலிடம், “இப்படி ஞானிகள் சொற்போர் செய்வது அசிங்கமாக இல்லையா?” என்று கேட்டது. அதற்கு, “இல்லை, இல்லை. இரண்டு இனிப்புக் கடைக்காரர்களுக்குள் சண்டை வந்தால் என்ன நடக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் இனிப்பால் அடித்துக் கொள்வார்கள். அப்போது சுற்றி இருப்பவர்களுக்கு இலவசமாய் இனிப்புக் கிடைக்கும். அதுதான் இங்கு நடக்கிறது” என்று மற்ற குயில் பதில் சொன்னது.
ஆம். ஞானிகளின் சொற்போர் அறிவாளிகளுக்கு விருந்து. ஆனால் அரசியல்வாதிகளிடையே இடம் பெறும் போட்டி பொறாமைகள் நாட்டு மக்களுக்குத் திண்டாட்டம். இதைப் புரிந்து கொள்வீர்களாக எமது தலைவர்களே!







All the contents on this site are copyrighted ©.