2011-11-07 15:54:03

மதங்களிடையே கருத்து பரிமாற்ற அவை ஒன்று உருவாக்கப்பட அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை கர்தினால்


நவ.07,2011. இலங்கையில் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ குழுக்களின் நடவடிக்கைகளால் அந்நாட்டின் புத்த மதத்தினருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே இடம்பெறலாம் என அஞ்சப்படும் மோதல்களைக் களையும் நோக்கில், இவ்விரு மதங்களிடையே கருத்து பரிமாற்ற அவை ஒன்று உருவாக்கப்படவேண்டும் என அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்.
அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போல் பல்வேறு இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவக் குழுக்கள் இலங்கைத் தலைநகர் கொழும்புவைச் சுற்றியுள்ள இடங்களில் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது மக்களை மதம் மாற்றுவதற்கான ஒரு முயற்சி என அந்நாட்டு புத்த மதத்தினர் அஞ்சி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
தாங்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்தவ சபைக்கு மதம் மாறி வரும்படி புத்தமதத்தினருக்கும் கத்தோலிக்கர்களுக்கும் சில இவாஞ்சலிக்கல் குழுக்கள் பணத்தாசைக் காட்டி வருவதாக குற்றம் சாட்டினார் கர்தினால் இரஞ்சித்.
மதங்களிடையே உரையாடல்களை வளர்க்க ஓர் அவை உருவாக்கப்படுவதன் மூலம் மத மோதல்களை தவிர்க்க உதவ முடியும் என்று கூறிய கர்தினால் இரஞ்சித், இத்தகைய அவை மூலம் பல மதக்குழுக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட முடியும் என்றார்.
மத மோதல்கள் உருவாகாமல் தடுக்கும் நோக்கில், மதஉரையாடல்கள் அவை ஒன்றை உருவாக்க விழையும் கர்தினால் இரஞ்சித்தின் பரிந்துரைக்கு, புத்தமத குரு Kamburugamuwe Wajira Thero தன் ஆதரவையும் பாராட்டையும் வெளியிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.