2011-11-07 15:35:20

நவம்பர் 08 வாழ்ந்தவர் வழியில்.... வீரமாமுனிவர்


கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joesph Beschi) என்ற இயற்பெயரைக் கொண்ட வீரமாமுனிவர் தலைசிறந்த ஐரோப்பியத் தமிழறிஞர். இத்தாலி நாட்டின் காஸ்திலியோனே என்ற ஊரில் 1680ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிறந்த இவர், 1698ம் ஆண்டில் தனது 18வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். உலக மொழிகளைக் கற்கும் ஆர்வத்தில் முப்பது வயதிற்குள் கிரேக்கம், இலத்தீன், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், ஜெர்மானியம், ஆங்கிலம், ஈரானியம் உட்பட ஒன்பது மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தென்னிந்தியாவில் மதுரை மறைப்பணித்தளத்தில் சேவையாற்ற விரும்பி லிஸ்பனிலிருந்து கப்பலில் 1710ம் ஆண்டில் கோவா வந்து சேர்ந்தார். பின்னர் கொச்சி சென்று அங்கிருந்து நடந்தே 1711ம் ஆண்டில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார். தமிழைக் கற்பதற்காக திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை போன்ற நகரங்களுக்குச் சென்றார். 1714ம் ஆண்டுக்கும் 1715ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குறுநில மன்னர்களின் அடக்குமுறையையும் மரணதண்டனையையும் எதிர் நோக்கினார். ஆனால் அவர் தனது இந்து சமய நண்பர் ஒருவரின் உதவியால் அத்தண்டனையிலிருந்து தப்பினார். இந்த அடக்குமுறையே அவர் தமிழை மிக நன்றாகக் கற்கத் தூண்டியது. பூண்டி மாதா பசிலிக்கா, கோனான்குப்பம் பெரியநாயகி திருத்தலம், ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா ஆலயம் போன்றவற்றைக் கட்டியவர் வீரமாமுனிவரே. இந்துக் கோவில்களின் கலைநுட்பத்தால் தூண்டப்பட்டு இவ்வாலயங்களை இவர் வடிவமைத்தார். தன்னை சந்நியாசி என்றழைத்து காவி உடை உடுத்தினார். இவர் சுமார் 12 ஆயிரம் பேருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார் எனச் சொல்லப்படுகிறது.
வீரமாமுனிவர் தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை முதலில் தைரியநாதன் என்று மாற்றினார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதால் தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால், "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். தமிழின் சிறப்பை மேலை நாட்டவர் உணரும் வண்ணம் திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார். சதுரகராதி உட்பட பல தமிழ் அகராதிகளை உருவாக்கினார். தமிழ் – இலத்தீன், இலத்தீன்-தமிழ், தமிழ்-போர்த்துக்கீயம் ஆகிய அகராதிகளை உருவாக்கினார். அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் ஆகியவற்றை விளக்குவதற்கு "ர" சேர்த்து எழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் வீரமாமுனிவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களை உரைநடையாக மாற்றியவர் இவர். இதனால் வீரமாமுனிவர் “தமிழ் உரைநடைத் தந்தை” எனவும் அழைக்கப்படுகிறார். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தவர். தமிழில் முதன் முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை ஆகிய நூல்களையும் படைத்தவர். 1728ம் ஆண்டில் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
வாடாத மாலை எனப் பொருள்படும் தேம்பாவணிக் காவியம் இவர் இயற்றிய மிகச் சிறந்த காவியம் ஆகும். மீட்பு வரலாற்றையும் புனித வளனின் வாழ்க்கையையும் விவரிக்கும் தேம்பாவணி, தமிழ் இலக்கியத்தில் மிகப் புகழ் பெற்றதாகும். இந்தக் காவியம், மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3,615 விருத்தப் பாக்களால் ஆனது. இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை இதில் இவர் அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கு மட்டுமே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைக்கவில்லை. வீரமாமுனிவர் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் ஆற்றிய தொண்டினை அங்கீகரிக்கும் விதமாக 1968ம் ஆண்டில் தமிழக அரசு, சென்னை மெரினா கடற்கரையில் இவருக்குச் சிலை எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. 1740ம் ஆண்டில் கோரமண்டல கடற்கரைப் பகுதிக்குச் சென்ற வீரமாமுனிவர் தனது இறுதிக் காலத்தை அங்கேயே செலவிட்டார். இவர் 1680ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி கேரளாவின் அம்பலக்காட்டில் இறந்தார். 18ம் நூற்றாண்டில் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய இயேசு சபை அருள்தந்தையருள் இவரும் ஒருவராவார்.







All the contents on this site are copyrighted ©.