2011-11-07 15:54:41

ஜெர்மனியில் மத சுதந்திரம் மற்றும் தலத்திருச்சபையின் பணிகள் குறித்து திருத்தந்தை மகிழ்ச்சி


நவ.07,2011. கடந்த செப்டம்பரில் தான் ஜெர்மனியில் மேற்கொண்ட திருப்பயணம் தன் எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி இருந்ததாகவும், அந்நிகழ்வுகள் இன்னும் பசுமையாக தன் நினைவில் இருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான ஜெர்மனியின் புதிய தூதுவர் Reinhard Schweppeஇடமிருந்து இத்திங்களன்று திருப்பீடத்தில் நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற வேளையில் உரையாற்றிய திருத்தந்தை, திருப்பீடமும் தலத்திருச்சபையும் ஆற்றிவரும் பணிகள் குறித்து ஆழ்ந்து நோக்க தன் ஜெர்மன் பயணம் நல்லதொரு வாய்ப்பாக இருந்தது எனவும் எடுத்துரைத்தார்.
ஒரு சமூகத்தின் வாழ்வு முறையை அமைப்பதிலும் நல்ல கலாச்சாரத்திற்கு உதவி வடிவமைப்பதிலும் மதங்கள் ஆற்றும் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. திருப்பீடத்திற்கான ஜெர்மனியின் புதிய தூதுவருடன் திருத்தந்தை மேற்கொண்ட இச்சந்திப்பின் போது, இரண்டாம் உலகப்போருக்குப்பின் 1949ம் ஆண்டு ஜெர்மனியில் மனித உரிமைகளுக்கான மதிப்புடன் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, மனித உரிமை அல்லது மனித மாண்பை மதிப்பது என்பது, கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வை பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்றார்.
இன்றைய உலகில் பெண்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
ஜெர்மனியில் கத்தோலிக்கத் திருச்சபை முழுச் சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் சிறப்புப்பணிகள் ஆகியவை குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தன் உரையில் மேலும் குறிப்பிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.