2011-11-05 14:17:59

நவம்பர் 6, இஸ்பானிய உள்நாட்டுச் சண்டையில் இறந்த மறைசாட்சிகளின் நினைவு


நவ.05,2011. இஸ்பானிய உள்நாட்டுச் சண்டையில் கொல்லப்பட்ட மறைசாட்சிகளை அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை இஞ்ஞாயிறன்று நினைவுகூரும் என்று அந்நாட்டு கோர்தோபா ஆயர் Demetrio Fernandez அறிவித்தார்.
இவ்வாண்டில், இஸ்பானிய உள்நாட்டுச் சண்டை இடம் பெற்றதன் 75ம் ஆண்டு கடைபிடிக்கப்படுகின்றது என்றுரைத்த ஆயர் Fernandez, இச்சண்டையில் பல்லாயிரக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர், இவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் என்று கூறினார்.
இச்சண்டையில் இறந்தவர்களில் சுமார் ஆயிரம் பேர் ஏற்கனவே அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்கள், இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
இவர்கள் இறந்ததற்கான நோக்கம், அதிகாரிகளின் முன்னிலையில் எவ்வாறு பதில் சொன்னார்கள் என்பது குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இச்சண்டையில் மறைசாட்சிகளானவர்கள், தங்கள் வீடுகளிலிருந்து கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தூக்கில் இடப்பட்டார்கள் எனவும் ஆயர் ஃபெர்ணான்டெஸ் விளக்கினார்.
1936ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி முதல் 1939ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி வரை இஸ்பானிய உள்நாட்டுச் சண்டை இடம் பெற்றது.







All the contents on this site are copyrighted ©.