2011-11-04 12:39:37

நவ 05, 2011. வாழ்ந்தவர் வழியில் .... சித்தரஞ்சன் தாஸ்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கை ஆற்றியவர் சித்தரஞ்சன் தாஸ். இவர் 1870ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
மாணவனாக இருந்த காலத்திலேயே தேசிய விடுதலை இயக்கங்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கற்ற இவர், 1909ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார். இந்த வழக்கில் இவர் பெற்ற வெற்றி மூலம் பிரபல வழக்கறிஞர் ஆனார்.
1920ல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரித்தானியரின் ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார். 1921ல் தன் மனைவி மகனுடன் கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டார். மோதிலால் நேருவுடன் இணைந்து சுயாட்சிக் கட்சியை ஆரம்பித்த சித்தரஞ்சன் தாஸ், கொல்கத்தாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயரானார். கிராமப்புற வளர்ச்சி, குடிசைத்தொழில், சிறு கடன் உதவிகள் போன்றவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவைகளைச் செயல்படுத்த உழைத்தார். இந்திய விடுதலைக்காகப் போராடவேண்டுமெனில் முதலில் இந்து-முஸ்லீம் ஒற்றுமை இன்றியமையாதது என்பதை உணர்ந்து அதற்காகவும் உழைத்தார்.
Forward என்ற செய்தித் தாளை பிரித்தானிய ஆட்சியாளருக்கு எதிராக ஆரம்பித்து நடத்தினார். இச்செய்தித் தாள் பின்னர் ‘விடுதலை’ (liberty) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவர் பல கவிதைகளையும் இயற்றியுள்ளார். இவரது கவிதைகள், ‘சாகர் சங்கீத்’ என்ற பெயரில் தொகுப்பாக வெளியிடப்பட்டு புகழ் பெற்றன.
விடுதலைப் போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் 1925ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி டார்ஜிலிங்கில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.