2011-11-04 15:29:30

திருப்பீடப் பேச்சாளர் : திருப்பீடத்துக்கும் நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள்தான் முக்கியம்


நவ.04,2011. உரோம் நகரிலுள்ள திருப்பீடத்துக்கானத் தனது தூதரகத்தை மூடுவதற்கு அயர்லாந்து எடுத்துள்ள தீர்மானத்தைத் திருப்பீடம் கவனத்தில் கொண்டுள்ளது என்று திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.
அயர்லாந்து அரசின் இத்தீர்மானம் குறித்து நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி, திருப்பீடத்துடன் தூதரக உறவுகளைக் கொண்டிருக்கும் எந்த நாடும், அதன் வசதி, வாய்ப்புக்களுக்குத் தகுந்தபடி உரோமையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ அதன் அலுவலகத்தைக் கொண்டிருப்பதற்குச் சுதந்திரம் உள்ளது என்று கூறினார்.
அயர்லாந்தைப் பொருத்தவரை இவ்விவகாரம் ஒன்றும் பெரிதல்ல என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, திருப்பீடத்துக்கும் நாடுகளுக்கும் இடையே உருவாகும் தூதரக உறவுகள்தான் முக்கியம் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
1920களில் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்த அயர்லாந்தை உடனடியாக அங்கீகரித்த வெளிநாடுகளில் வத்திக்கானும் ஒன்றாகும்.
அயர்லாந்து அரசின் இத்தீர்மானத்தை அறிவித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Eamon Gilmore, இத்தீர்மானம் வருந்துதற்குரியது எனினும், தற்போதைய பொருளாதார நிலையால் இம்முடிவை எடுக்க நேர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
திருப்பீடம் 179 நாடுகளுடன் தூதரக உறவைக் கொண்டுள்ளது. இவற்றில் 80 நாடுகள் மட்டுமே உரோமையில் தூதர்களைக் கொண்டுள்ளது. திருப்பீடத்துக்கான இந்தியத் தூதர் சுவிட்சர்லாந்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.