2011-11-04 15:27:03

திருத்தந்தை : ஒரு நாட்டினரின் ஒன்றிணைந்த வாழ்வுக்கு உண்மையும் நீதியும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம்


நவ.04,2011. ஒரு நாட்டில் உண்மையும் நீதியும் கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே அந்நாட்டினர் ஒன்றிணைந்து வாழ்வது இயலக்கூடியது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வெள்ளிக்கிழமை கூறினார்.
ஐவரி கோஸ்ட் நாட்டின் திருப்பீடத்துக்கானப் புதிய தூதர் Joseph Tebah-Klah விடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, பல ஆப்ரிக்க நாடுகளைப் போலவே ஐவரி கோஸ்ட் நாட்டிலும் பல மதங்களும் பல இனங்களும் இருக்கின்றன, எனவே நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது எப்பொழுதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் கடந்த ஆகஸ்டில் அரசு அதிகாரிகளுக்கென கொண்டு வரப்பட்டுள்ள ஒழுக்கநெறி விதிமுறைகளுக்குத் தனது பாராட்டுதல்களையும் தெரிவித்தார் திருத்தந்தை.
நாட்டின் வளங்கள், அனைத்துக் குடிமக்களுக்கும் சமமாகப் பகிரப்படுவது அரசு அதிகாரிகளைச் சார்ந்து இருக்கின்றது என்பதையும் குறிப்பிட்ட அவர், ஒரு நாட்டின் வளமையான எதிர்காலத்திற்குக் கல்வி மிகவும் இன்றியமையாதது என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
ஐவரி கோஸ்ட் நாட்டிற்கும் திருப்பீடத்தும் இடையே அரசியல் உறவு உருவானதன் நாற்பதாம் ஆண்டு நிறைவில் இப்புதிய தூதர் Joseph Tebah-Klah பொறுப்பேற்பதையும் சுட்டிக் காட்டிப் பேசிய திருத்தந்தை, அவரது பணிக்குத் திருப்பீடப் பணியாளரின் ஒத்துழைப்பு இருக்கும் என்பதற்கும் உறுதி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.