2011-11-03 14:52:33

பார்வை இழந்தோரின் பாதுகாவலராக அருளாளர் Manuel Lozano Garridoவை அறிவிக்க கோரிக்கை


நவ.03,2011. சென்ற ஆண்டு ஜூன் மாதம் அருளாளராக உயர்த்தப்பட்ட Manuel Lozano Garrido அவர்களை பார்வை இழந்தோரின் பாதுகாவலராக திருத்தந்தை அறிவிக்க வேண்டும் என்ற முயற்சியில் இஸ்பானிய கத்தோலிக்க பார்வை இழந்தோர் கழகம் ஈடுபட்டுள்ளது.
1920ம் ஆண்டு இஸ்பெயின் நாட்டில் பிறந்து 1971ம் ஆண்டு மறைந்த Manuel Lozano, தன் வாழ்வின் 25 ஆண்டுகளை சக்கர நாற்காலியில் செலவழித்தவர். இவரது இறுதி ஒன்பது ஆண்டுகள் பார்வையையும் இழந்து, இவர் துன்புற்றார்.
செய்தியாளராகப் பணிபுரிந்த இவர், 2010ம் ஆண்டு ஜூன் மாதம் அருளாளராக உயர்த்தப்பட்டார். செய்தித் துறையில் பணிபுரிவோரில் முதல் முறையாக அருளாளராக உயர்த்தப்பட்ட பெருமை இவரையேச் சாரும்.
கடவுள் மீது கொள்ளும் விசுவாசம், ஊனக் கண்களால் காணும் சக்தியைச் சார்ந்தது அல்ல மாறாக, அகக் கண்களால் இறைவனைக் காணும் சக்தியைச் சார்ந்தது என்பதை அருளாளர் Manuel Lozano வாழ்ந்து காட்டியதால், அவரைத் தங்கள் பாதுகாவலாராகப் பெற விழைகிறோம் என்று கழகத்தின் உதவித் தலைவர் Ignacio Segura Madico கூறினார்.
1990ம் ஆண்டு இஸ்பெயின் நாட்டின் Zaragoza மறைமாவட்டத்தில் உருவாக்கப்பட்டு, 2008ம் ஆண்டில் திருச்சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இஸ்பானிய கத்தோலிக்க பார்வை இழந்தோர் கழகத்தில், பார்வை இழந்தோரும் அவர்களுக்கு பணிபுரிவோரும் இணைந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.