2011-11-03 14:54:53

நவம்பர் 04 வாழ்ந்தவர் வழியில்.... இட்சாக் இரபீன்


இஸ்ரேலின் முன்னாள் பிரதமரும் அரசியல்வாதியும், இஸ்ரேலின் இராணுவ அதிபருமாக இருந்த இட்சாக் இரபீன் 1922 ம் ஆண்டு மார்ச் முதல் நாளன்று எருசலேமில் பிறந்தார். இவர் 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரையும், 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரையும் இஸ்ரேலின் பிரதமராக இருந்தவர். இரண்டு தடவைகள் இஸ்ரேலின் பிரதமராக இருந்த இட்சாக் இரபீன், 1994ம் ஆண்டில், ஷிமோன் பெரெஸ், முன்னாள் பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நொபெல் விருதைப் பெற்றார். இவர் 1993ம் ஆண்டில் யாசர் அரபாத்துடன் ஆஸ்லோவில் அமைதி உடன்பாட்டிற்கு கையெழுத்திட்டார். இந்த உடன்பாட்டின் மூலம், பாலஸ்தீனத் தேசிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்படவும், காசா மற்றும் வெஸ்ட் பாங்கின் ஒரு பகுதிக்கான நிர்வாக உரிமை கிடைக்கவும் வழி பிறந்தது. இந்த அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதற்கு முன்னரே அதாவது 1993ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, யாசர் அரபாத், தான் வன்முறையைக் கைவிடுவதாகவும் இஸ்ரேலை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாகவும், இரபீனுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அதேநாளில் இரபீனும், PLO என்ற பாலஸ்தீன விடுதலை அமைப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்பதாக அரபாத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை விரும்பாத இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதி Yigal Amir என்பவரால் இரபீன் 1995ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இட்சாக் இரபீன், இஸ்ரேலைத் தாயமாகக் கொண்ட முதல் பிரதமர், கொலை செய்யப்பட்ட முதல் இஸ்ரேல் பிரதமர் மற்றும் பணியில் இருந்த போது இறந்த இரண்டாவது இஸ்ரேல் பிரதமர் ஆவார்.







All the contents on this site are copyrighted ©.