2011-11-03 14:52:45

ஐ.நா.நிறுவனம் வெளியிட்ட மனித முன்னேற்றம் அறிக்கையில் நார்வே முதலிடம்


நவ.03,2011. ஐ.நா.நிறுவனம் வெளியிட்ட மனித முன்னேற்றம் அறிக்கையில் நார்வே, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களையும், ஆப்ரிக்காவின் காங்கோ, நைஜர், புருண்டி ஆகிய நாடுகள் இறுதி மூன்று இடங்களையும் பிடித்துள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் மனிதர்கள் வாழும் காலஅளவு, கல்வியறிவு, நாட்டின் பொருள் உற்பத்தி, ஒவ்வொரு மனிதரும் பெறும் வருமானம் ஆகிய அளவைகளின் அடிப்படையில் UNDP என்ற ஐ.நா.வின் ஓர் அங்கம் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் இவ்வறிக்கை இப்புதனன்று வெளியிடப்பட்டது.
சென்ற ஆண்டு 169 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, இவ்வாண்டு 187 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டது. இந்த நாடுகளின் வரிசையில் இலங்கை 97வது இடத்தையும், இந்தியா 134வது இடத்தையும் பெற்றுள்ளன.
அமெரிக்க ஐக்கிய நாடு, நியூசிலாந்து, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகள் மனித முன்னேற்றம் என்ற இவ்வறிக்கையின்படி, முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள்.
மக்களிடையே நிலவும் பொருளாதார வேறுபாடு அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிக அதிக அளவு உயர்ந்திருப்பதால், அந்த அளவையில் அந்நாடு 4வது இடத்திலிருந்து 23வது இடத்திற்கு வீழ்ந்துள்ளது. அதேபோல், கொரியா 15வது இடத்திலிருந்து 32 வது இடத்திற்கும், இஸ்ரேல் 17 வது இடத்திலிருந்து 25வது இடத்திற்கும் வீழ்ந்துள்ளன.
இருபாலினரிடையே நிலவும் வேறுபாடுகள் என்ற அளவில், ஐரோப்பிய நாடுகள் மென்மையான இடங்களிலும், ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகள் தாழ்வான இடங்களையும் பிடித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.