2011-11-03 14:51:24

இஸ்லாமியக் கட்சிகள் பதவிக்கு வருவதைக் கண்டு ஜரோப்பிய நாடுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை துனிசியா பேராயர் Lahham


நவ.03,2011. துனிசியாவில் தற்போது நடைபெற்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சி ஒன்று பதவிக்கு வந்திருப்பதை சந்தேகத்துடனும், பயத்துடனும் நோக்கத் தேவையில்லை என்று Tunis பெருமறைமாவட்டத்தின் பேராயர் Maroun Elias Lahham கூறினார்.
அரேபிய நாடுகளில் தற்போது சுதந்திரமான, மக்களாட்சி முறையில் தேர்தல்கள் நடைபெற்றால், இஸ்லாமியக் கொள்கைகளால் உந்தப்பட்ட கட்சிகளே வெற்றி பெறும் என்று கூறிய பேராயர் Lahham, துனிசியாவில் நடந்துள்ளதுபோல், அடுத்து தேர்தலைச் சந்திக்கவிருக்கும் எகிப்திலும் இஸ்லாமியக் கட்சிகளே பதவிக்கு வரலாம் என்று கூறினார்.
துனிசியாவில் பல ஆண்டுகளாக பென் அலி நடத்திவந்த ஆட்சியால் மனம் வெறுத்துப் போனவர்களுக்கு தற்போது தேர்தலில் வெற்றிபெற்றுள்ள Ennahda முஸ்லிம் கட்சி நம்பிக்கையைத் தந்துள்ளது என்பதையும், சர்வாதிகார ஆட்சி முறையில் சிக்குண்டிருந்த பல நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்த துனிசியா நாட்டின் புரட்சி, அரேபிய நாடுகளின் வசந்தம் என்ற ஒரு புதிய போக்கினை உலகிற்கு காண்பித்துள்ளது என்பதையும் பேராயர் Lahham சுட்டிக் காட்டினார்.
இஸ்லாமியக் கட்சிகள் பதவிக்கு வருவதைக் கண்டு ஜரோப்பிய நாடுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எவ்வகை இஸ்லாம் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது என்பதே முக்கியம் என்றும் கூறிய பேராயர் Lahham, மக்களாட்சி என்ற முகமூடியை அணிந்து வரும் எவ்வகை சர்வாதிகாரத்தையும் மக்கள் இனி இனம் கண்டு கொள்வர் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.