2011-11-02 15:33:37

நவ 03, 2011. – வாழ்ந்தவர் வழியில்........, அமர்த்தியா குமார் சென்


இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் 1933ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி பிறந்தார். இவர் சாந்திநிகேதனில் பிறந்தபோது அமர்த்தியா என்ற பெயரை இவருக்கு இட்டவர் இரபீந்தரநாத் தாகூர் என்று சொல்லப்படுகிறது. அரசு நிர்வாகத்திலும் கல்வித்துறையிலும் மிகப் புகழ்பெற்றக் குடும்பத்தில் பிறந்தார் அமர்த்தியா சென். அப்போது இந்தியாவின் நகர்களுள் ஒன்றாக இருந்த தற்போதைய பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தன் பள்ளிப் படிப்பைத் துவக்கிய இவர், 1947ம் ஆண்டின் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவிற்குத் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்து, கொல்கத்தாவில் பட்டப்படிப்பை முடித்து, பின் இலண்டன் கேம்பிரிட்ஜில் உயர்படிப்பை மேற்கொள்ளச் சென்றார்.
இந்தியா திரும்பியபோது, கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் பொருளாதாரக் கல்வித்துறையின் தலைவராகவும் தன் 23ம் வயதில் நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தின் ஒரு கல்வித் துறைத்தலைவராக 23 வயதில் ஒருவர் நியமிக்கப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லை.
மனித மேம்பாட்டுக் கொள்கை, பஞ்சம், நலநிறைவு நிலை பொருளாதாரம், ஆண்-பெண் சரி நிகர் நிலை, ஏழ்மையின் காரணங்கள், அரசியல் விடுதலை ஆகியவைத் தொடர்புடைய இவரின் பணிகளுக்காகப் 'பொருளாதாரத்தின் மனச்சான்று மற்றும் பொருளாதாரத்தின் அன்னை தெரேசா' என்று அழைக்கப்பட்டார். ஆனால், தன்னையே மறுத்து அர்ப்பணத்துடன் சேவையாற்றும் ஒரு வாழ்க்கை முறை தன்னுடையதில்லை என்பதால் அன்னை தெரேசாவுடன் தன்னை ஒப்பிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆக்ஸ்ஃபோர்டு, ஹார்வார்டு உட்பட உலகின் 90க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலிருந்து கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ள இவருக்கு 1998ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நொபெல் விருது வழங்கப்பட்டது. 1999ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவித்தது. அதே ஆண்டு பங்களாதேஷ் அரசு இவருக்கு கௌரவக் குடியுரிமை வழங்கியது. உலகின் பல்வேறு பலகலைக்கழகங்களின் அழைப்பின் பேரில் அவ்வப்போது சென்று கற்பித்து வரும் இவரை, இவ்வாண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியின் முக்கிய அறிவுரையாளராக நியமித்தது மேற்கு வங்க அரசு.








All the contents on this site are copyrighted ©.