2011-11-02 15:39:51

தலித் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் குழு சோனியா காந்தியுடன் சந்திப்பு


நவ.02,2011. இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த கிறிஸ்தவ பிரதிநிதிகள் குழு ஒன்று ஐக்கிய முன்னேற்ற கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை இச்செவ்வாயன்று புது டில்லியில் சந்தித்தனர்.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், இந்திய கிறிஸ்தவ சபைகளின் அவையும் மேற்கொண்டுள்ள கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, தலித் கிறிஸ்தவர்கள் தேசியக் குழு, மற்றும், தலித் கிறிஸ்தவர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் சோனியா காந்தியைச் சந்தித்தனர்.
கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது குறித்து எட்டு வாரங்களில் பதில் கூறுவதாக, 2008ம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசு உச்ச நீதி மன்றத்திற்கு அளித்த வாக்குறுதிக்குப் பின் மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன என்று இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் தலைவர் அருள்தந்தை காஸ்மோன் ஆரோக்கியராஜ் சோனியா காந்தியிடம் நினைவுத்தினார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் காங்கிரஸ் கட்சியுடன் இத்தனை ஆண்டுகள் உறவு கொண்டிருந்தாலும், இவ்விரு மதத்தவருக்கும் உரிய சலுகைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று அருள்தந்தை ஆரோக்கியராஜ் தெரிவித்தார்.
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்குத் தன் முழுமையான கவனத்தைச் செலுத்துவதாக இச்சந்திப்பின்போது சோனியா காந்தி கூறினார் என்று UCAN செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.