2011-11-02 15:39:12

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திருப்பயணங்கள் ஆரம்பம்


நவ.02,2011. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திருப்பயணங்கள் என்ற ஒரு முயற்சி இச்செவ்வாயன்று இத்தாலியின் அசிசி நகரில் துவக்கப்பட்டது.
ARC என்றழைக்கப்படும் ‘மதங்கள் மற்றும் பாதுகாப்பின் கூட்டணி’ என்ற ஓர் அமைப்பும், WWF என்றழைக்கப்படும் உலக வனவாழ்வின் நிதிஅமைப்பும் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த உலகளாவிய முதல் முயற்சியில் கலந்து கொள்ள உலகின் 15 மதங்களின் பிரதிநிதிகள் அசிசி நகரில் கூடி வந்தனர்.
ARC அமைப்பு நடத்திய ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில், உலகெங்கும் திருப்பயணங்கள் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறதென்று அறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதமும் இயற்கையை மதிக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றன. இவ்விரு தரவுகளின் அடிப்படையில் வளர்ந்து வரும் திருப்பயணங்கள் இயற்கையை அழிக்காத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இச்செவ்வாய் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி வலியுறுத்துகின்றது.
திருத்தலங்களைச் சுற்றி வாகனப் பயன்பாடுகளைக் குறைத்தல், கோவில்களிலும், பிற திருத்தலங்களிலும் சூரிய ஒளியால் சக்திபெறக்கூடிய வழிமுறைகளைப் பயன்படுத்துதல், திருத்தலங்களில் நூற்றுக் கணக்கான மரங்களை நடுதல், திருப்பயணிகளுக்கு நல்ல குடி நீர் வசதிகளை அமைத்தல் ஆகிய பல முடிவுகள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
1986ம் ஆண்டு அசிசி நகரில் அருளாளர் இரண்டாம் ஜான் பால் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முதல் அமைதி முயற்சியின்போது, உலக அமைதியைக் காப்பதற்கு, சுற்றுச் சூழலைக் காக்கும் கடமையும் நமக்கு உண்டு என்று வலியுறுத்தப்பட்டது என்பது இச்செவ்வாய் நிகழ்ந்த கூட்டத்திலும் நினைவுறுத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.