2011-11-02 15:39:38

கர்நாடகாவின் 14 கத்தோலிக்க ஆயர்கள் மாநில முதல்வருடன் சந்திப்பு


நவ.02,2011. குற்றமற்ற கிறிஸ்தவ இளையோர்மீது தேவையில்லாத குற்றங்கள் சுமத்தப்பட்டு, ஒவ்வொரு நாளும் காவல்துறை விசாரணைகளுக்கு ஆளாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டுமென்று பெங்களூர் பேராயர் Bernard Moras கூறினார்.
2008ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவக் கோவில்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு தாக்குதல்களில், அவ்வன்முறையில் ஈடுபட்டோருக்குப் பதிலாக, கிறிஸ்தவ சபையின் உறுப்பினர்கள், முக்கியமாக இளையோர் பலர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் சார்பில், கர்நாடகாவின் 14 கத்தோலிக்க ஆயர்கள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை அண்மையில் சந்தித்தவேளையில், கிறிஸ்தவ இளையோருக்கு காவல்துறையினர் தொடர்ந்து துன்பங்கள் கொடுத்து வருவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும், வன்முறைகளால் சேதமடைந்துள்ள கிறிஸ்தவ கோவில்கள் நிறுவனங்கள் அனைத்திற்கும் தகுந்த ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டுமென்றும், எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவ கோவில், நிறுவனம் அனைத்திற்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆயர்கள் முதல்வரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
முதல்வருடன் தாங்கள் மேற்கொண்ட பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடந்ததென்றும், தாங்கள் அளித்த விண்ணப்பங்களின் மேல் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார் என்றும் பெங்களூர் பேராயர் Moras கூறினார்.








All the contents on this site are copyrighted ©.