2011-11-02 15:40:49

இயற்கை வளங்களை மனித குலம் அழித்து வரும் வேகம் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது - ஐ.நா. அறிக்கை


நவ.02,2011. நம் வாழ்வுக்கும் பொருளாதரத்திற்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாக அழித்து வரும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் அறிக்கையொன்று கூறுகிறது.
1992ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டின் (Earth Summit) இருபதாம் ஆண்டு நிறைவையொட்டி, அதே நகரில் 2012ம் ஆண்டு நடைபெற விருக்கும் Rio+20 என்ற உச்சி மாட்டிற்கு தயாரிக்கும் வகையில், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையில் இயற்கை வளங்களை மனிதர்கள் அழிப்பதால் வரும் ஆபத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
மக்கள் தொகை, சுற்றுச்சூழல் மாற்றங்கள், சக்தி பயன்பாடு, உணவு பாதுகாப்பு ஆகிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையில் மனித குலம் சந்திக்க இருக்கும் சவால்கள் தெளிவாக்கப்பட்டுள்ளன.
1992ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை இயற்கை வளங்களையும், பன்முக உயிரினங்களையும் மனித குலம் அழித்து வரும் வேகம் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவையின் இயக்குனர் அக்கிம் ஸ்டெய்னர் (Achim Steiner) கூறினார்.
முதல் உலக உச்சி மாநாடு 1992ம் ஆண்டு, Rio நகரில் நடைபெற்றபோது, சுற்றுச் சூழல் பற்றிய கவலைகளாக இருந்த ஒரு சில போக்குகள் இன்று பல நாடுகளில் மிக அதிக அளவில் ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகளாகி உள்ளது கவலையைத் தருகிறதென்று அக்கிம் ஸ்டெய்னர் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.