2011-11-01 14:50:17

கேரள அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து பேராயர்


நவ.01,2011. அதிகக் குழந்தையுள்ளக் குடும்பங்களை பொருளாதார ரீதியாகத் தண்டிக்க முயலும் கேரள காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் விண்ணப்பித்துள்ளார் கேரளாவின் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்க சபையின் தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி.
கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பமும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்ற கொள்கையைச் செயல்படுத்த மாநில அரசு முயன்று வருவது, மனிதர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என பேராயர் ஆலஞ்சேரி, சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்தபோது கூறினார்.
கம்யூனிச நாடான சீனாவில் இருக்கும் முறையற்ற ஒரு சட்டத்தை குடியரசு நாடான இந்தியாவிலும் புகுத்த முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் எடுத்துரைத்தார் சீரோ மலபார் ரீதி பேராயர் ஆலஞ்சேரி.
எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பதை தம்பதியரின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டுமேயொழிய, அரசு அதில் தலையிட உரிமையில்லை என்பதையும் வலியுறுத்திய பேராயர், மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரிசாவின் கந்தமாலில் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் குறித்து சோனியா காந்தி அக்கறை கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.