2011-11-01 14:49:45

இந்தியாவின் பல நகரங்களில், குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் அகற்றும் வசதி இல்லை


நவ.01,2011. இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில், 50 விழுக்காடு நகரங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதி இல்லை என, மத்திய அரசு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, துப்புரவு வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவை குறித்து மத்திய நகர்ப்புற அமைச்சகம் சமீபத்தில், 12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில், 50 விழுக்காடு நகரங்களில் இந்த அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள 249 நகரங்களில், நவி மும்பை மற்றும் மால்காபூரில் மட்டும் தான் 24 மணி நேர தண்ணீர் விநியோகம் உள்ளது, பெரும்பாலான நகரங்களில் நிலத்தடி சாக்கடையே கிடையாது.
கர்நாடகாவில் 52 நகரங்களில் மட்டும் கழிவுநீர் அகற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது, ஆந்திராவில் 124 நகரங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் வசதி செய்து தரப்படவில்லை, மத்திய பிரதேசத்தில் 46 விழுக்காடு நகரங்களில் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது, என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நகர்ப்புற நிர்வாகத்துறை இயக்குனர் சீனிவாஸ் சாரி குறிப்பிடுகையில், “பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நினைக்கும் அரசு, இது போன்ற அடிப்படை வசதிகள் விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என்றார்.








All the contents on this site are copyrighted ©.