2011-11-01 14:50:50

அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவையொட்டி, திருத்தந்தையின் மூவேளை செபஉரை


நவ.01,2011. திருச்சபையை அன்பு கூர்ந்து அதனைப் புனிதப்படுத்த தன்னையேக் கையளித்த இயேசுவைப் பின்பற்றும் நாம், திருமுழுக்கின் வழியான நம் அழைப்பை ஏற்று புனிதர்களாக மாறுவதற்கான வழிகளைக் கைகொள்வோம் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவையொட்டி, இச்செவ்வாயன்று தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செபஉரை வழங்கியத் திருத்தந்தை, வாழ்வின் பல்வேறு வழிகள் மூலம் புனிதர்களாக மாறிய திருச்சபையின் இந்தப் புனிதர்கள் கூட்டம், இயேசுவே நமது இறுதி நம்பிக்கை என்பதையும், அவரை மையமாகப் பற்றிக்கொண்டு நாம் பல்வேறு வழிகள் மூலம் புனிதத்துவத்தை அடையலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது என்றார்.
வாழ்வின் எல்லா நிலைகளும், அருளின் நடவடிக்கைகளாக மாறி அர்ப்பணத்துடனும் உறுதி நிலைப்பாட்டுடனும் செயல்படும்போது புனிதமாக மாறமுடியும் என மேலும் உரைத்தார் திருத்தந்தை.
இப்புதனன்று திருச்சபையில் சிறப்பிக்கப்படும் அனைத்து ஆன்மாக்கள் விழா குறித்தும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த அவர், இறந்த நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக நாம் மேற்கொள்ளும் செபங்கள் அவர்களுக்கு மட்டும் உதவுவதில்லை, மாறாக நமக்காக அவர்கள் பரிந்துபேசுவதற்கும் உதவுகிறது என்று கூறினார்.
இறந்த உறவினர்களின் கல்லறையைச் சென்றுத் தரிசிப்பது, மரணத்திற்குப் பின் வரும் நம் வாழ்வின் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையையையும் பலப்படுத்துகிறது என மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.