2011-10-31 14:55:44

நவம்பர் 01 வாழ்ந்தவர் வழியில்.... எம்.கே. தியாகராஜ பாகவதர்


எம்.கே.டி என அழைக்கப்படும் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்படத்துறையில் சூப்பர் ஸ்டார் என்று முதன் முதலாக கருதப்பட்டவரும் மிகச் சிறந்த கர்நாடக இசைப் பாடகரும் ஆவார். 1934ம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஆறு படங்கள் மிகப் பெரிய வெற்றிப் படங்களாகும். 1944ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரின் சாதனைத் திரைப்படமான ஹரிதாஸ் மூன்று ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஓடி மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலக் கட்டத்தில் பெற்றிருந்தது. ஒருசமயம் இவர் நடத்திய நான்கு மணி நேரக் கச்சேரியில் இவரது கர்நாடக இசையின் இனிமையையும் நுணுக்கத்தையும் குரல் வளத்தையும் கண்டு வியந்த புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் ஒரு "பாகவதர்" என்று பட்டம் வழங்கினார். நாளடைவில் பாகவதர் என்றால் எம்.கே.தியாகராஜனை மட்டுமே குறிப்பதாக அமைந்தது. உன்னை அல்லால், மன்மதலீலை, நீலகண்டா போன்ற பல பாடல்கள் இவரின் புகழுக்குச் சான்றாக உள்ளன. சுருதியின் உச்சநிலையிலிருந்து உடனே கீழே இறங்கிப் பாடும் திறமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர். மாயவரத்தில் 1910ம் ஆண்டு மார்ச் முதல் தேதி பிறந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு 1959ம் ஆண்டு நவம்பர் முதல் நாளன்று காலமானார். தமிழ்த் திரையுலகில் அவரைப் போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை என்ற ஒரு கருத்தும் இவரைப் பற்றி நிலவுகிறது.







All the contents on this site are copyrighted ©.