2011-10-29 16:37:08

நற்செய்தி அறிவித்தல் என்பது வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் கூறுகளுள் ஒன்றாக இருக்கிறது என்கிறார் பாப்பிறை


அக் 29, 2011. நற்செய்தி நோக்கித் திரும்பும் போது மனமாற்றமும் மனமாற்றத்தின் வழி வளர்ச்சிப் பணிகளுக்கான அர்ப்பணமும் இடம்பெறுகிறது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அட்லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த அங்கோலா மற்றும் சவோதோம் பிரின்சிபே நாடுகளின் ஆயர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய பாப்பிறை, நற்செய்தி அறிவித்தல் என்பது வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் கூறுகளுள் ஒன்றாக இருக்கிறது என்றார்.
ஆப்ரிக்க நாடுகளில் கத்தோலிக்கத் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்தும் ஆயர்களுக்கு சுட்டிக்காட்டிய பாப்பிறை, திருமணப் பொறுப்புணர்வுகளை ஏற்கும் வண்ணம் இளைய தலைமுறையினரை மனிதகுல மற்றும் ஆன்மீக முதிர்ச்சி நோக்கி தயாரித்து அழைத்துச் செல்ல வேண்டிய கடமை திருச்சபைக்கு உள்ளதையும் எடுத்துரைத்தார்.
பில்லி சூன்யம் என்ற பெயரால் குழந்தைகளும் முதியோர்களும் உயிரிழக்கும் சூழல்களில், தலத்திருச்சபை, உண்மையின் பக்கம் நின்று தன் குரலை எழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் பாப்பிறை.
திருமுழுக்கு பெற்ற மக்களும் கூட கிறிஸ்தவத்திற்கும் ஆப்ரிக்க பாரம்பரிய மதங்களுக்கும் இடையே பாகுபட்டவர்களாய் உழன்று வரும் சூழல்களில், புதிய நற்செய்தி அறிவித்தலின் அவசியத்தை அங்கு திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
ஆப்பிரிக்க நாடுகள் பல, தங்கள் இனம், மொழி ஆகியவைகளையும் தாண்டிச் சென்று, அண்மை நாடுகளின் மக்களுக்கு உதவி வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட பாப்பிறை, இத்தகையைப் பணிகள் தொடர்ந்து இடம்பெற தலத்திருச்சபைகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பெனின் நாட்டிற்கான தன் அடுத்த திருப்பயணம் குறித்தும் ஆயர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.