2011-10-28 14:51:02

அசிசி நகர் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்சமயப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு


அக்.28,2011. உலகில் அமைதியை விழையும், மற்றும் அமைதிக்காக உழைத்து வரும் பல கோடி மக்களின் பிரதிநிதிகளாக அசிசி நகரில் மதத்தலைவர்கள் மேற்கொண்ட ஒரு நாள் முயற்சிக்கு தன் நன்றியைத் தெரிவிப்பதாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று அசிசி நகரில் நடைபெற்ற பல் சமயக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியத் திருத்தந்தை, அசிசி நகரில் உணரப்பட்ட நல்லுறவு, உலகின் அனைத்து குழுக்களிடையேயும் உருவாவதையே தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.
வெகு தொலைவில் இருந்து, கடினமான பயணங்களை மேற்கொண்ட பல பிரதிநிதிகளின் முயற்சியைத் தனிப்பட்ட வகையில் பாராட்டியத் திருத்தந்தை, அனைத்து மதங்களின் சார்பில் உண்மையைத் தேடும் இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தன் நன்றியைக் கூறினார்.
1986ம் ஆண்டில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்தது, எதிர்காலத்தின் தேவைகளைத் தீர்க்கமாகச் சிந்திக்க முடிந்த அவரது எண்ணங்களைத் தெளிவாக்குகிறது என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, உலக அமைதி ஒரு தொடர் பயணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று கூறினார்.
இந்த ஒரு நாள் முயற்சிக்குப் பின் நாம் நமது இடங்களுக்கும், நம் பணிகளுக்கும் பிரிந்து செல்லும்போது, இந்தப் பயணத்தின் நல்லுணர்வுகளைத் தாங்கிச்செல்வோம் என்று திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.
திருத்தந்தையின் உரைக்குப் பின், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீஸியோ பெர்தோனே வழங்கிய விருந்தில் அனைத்துப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.