2011-10-28 14:51:21

அசிசி நகரில் நடைபெற்ற ஒரு நாள் பல்சமயக் கூட்டத்தின் இறுதி நிகழ்வுகள்


அக்.28,2011. வன்முறையும், போரும், தீவிரவாதமும் இனி உலகில் ஒருபோதும் வேண்டாம்; கடவுளின் பெயரால் ஒவ்வொரு மதமும் உலகிற்கு நீதியை, அமைதியை, மன்னிப்பை, அன்பை மற்றும் வாழ்வைக் கொண்டு வரட்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று அசிசி நகரில் நடைபெற்ற ஒரு நாள் பல்சமயக் கூட்டத்தின் இறுதி நிகழ்வாக மாலையில் புனித பிரான்சிஸ் பசிலிக்கா பேராலய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருத்தந்தையின் அழைப்பை ஏற்று அசிசி நகர் வந்திருந்த 300க்கும் அதிகமான மற்ற சமயப் பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் ஒளியேற்றப்பட்ட ஒரு விளக்கை இளையோர் அளித்தனர். அமைதிக்காக அங்கு இருந்தோர் கூறிய உறுதி மொழிகளின் ஓர் அச்சாரமாக அந்த ஒளிவிளக்குகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கடவுளிடமிருந்து வரும் அமைதியை உலகில் இன்னும் ஆழமாக விதைக்க நாம் அனைவரும் கருவிகளாவோம் என்று கூறிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch, மன்னிப்பின்றி நீதியும், நீதியின்றி அமைதியும் உருவாக முடியாது என்று வலியுறுத்தினார்.
இந்த மாலை நிகழ்வில், ஒருவருக்கொருவர் சமாதானத்தைப் பகிர்ந்து கொண்ட போது, அங்கிருந்த பிரான்சிஸ்கன் துறவியர் வெள்ளைப் புறாக்களை வானில் பறக்க விட்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் விருப்பமுள்ள பிரதிநிதிகளும், திருத்தந்தையும் புனித பிரான்சிஸ் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்று செபித்தனர்.








All the contents on this site are copyrighted ©.