2011-10-27 16:08:52

அக்டோபர் 28 வாழ்ந்தவர் வழியில்.... மாக்ஸ் முல்லர்


மாக்ஸ் முல்லர் (Friedrich Max Müller) என்று பரவலாக அறியப்படும் பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர், ஒரு ஜெர்மானிய மொழியியலாளரும், கீழை நாடுகளின் ஆய்வாளரும் ஆவார். இந்திய ஆய்வியலைத் தொடங்கி வைத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் இவர், சமய ஒப்பாய்வுத் துறையை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார். இவர், இத்துறையில் ஆய்வு நூல்களையும், சாதாரண பொது மக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட, கிழக்கத்தியப் புனித நூல்கள் (Sacred Books of the East) என்னும் பெயர்கொண்ட 50 தொகுதிகள் அடங்கிய பெரிய நூல் விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சிகளுக்குச் சான்றான ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் திகழ்கிறது. ஜெர்மனியின் Dessau எனும் ஊரில் 1823 ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிறந்த மாக்ஸ் முல்லரின் தந்தை Wilhelm Müller காதல் காவியங்கள் எழுதுபவர். 1844ம் ஆண்டில் பெர்லின் சென்ற மாக்ஸ் முல்லர், Friedrich Schelling என்பவருக்காக உபநிடதங்களை மொழி பெயர்க்கத் தொடங்கினார். அத்துடன் சமஸ்கிருத மொழியில் ஆராய்ச்சியையும் தொடர்ந்தார். Schelling என்பவரே, முல்லரை மொழியின் வரலாற்றை மதத்தின் வரலாற்றோடு தொடர்புபடுத்தத் தூண்டியவர். முல்லர், 1845ம் ஆண்டில் ரிக் வேதம் முழுவதையும் சமஸ்கிருதத்தில் தொகுத்து வெளியிட்டார். மொழியின் வளர்ச்சி, கலாச்சார முன்னேற்றத்தோடு தொடர்புடையது என்று வல்லுனர்கள் பார்க்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் முல்லரின் சமஸ்கிருத மொழி ஆய்வுகள் வெளியாகின. அண்மை ஆய்வு ஒன்றும், இந்திய ஐரோப்பிய மொழிகளில் பழமையானது வேத கால மொழியான சமஸ்கிருதம் என்று கூறுகிறது. மாக்ஸ் முல்லர், 1900 மாம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி காலமானார்.
“ஒருவர் தன்னை உயர்த்திக் கொள்ள நேரம் வரும் போது இளமையாகவும் வலிமையானவராகவும் இருந்த போதிலும் அவர் தன்னை உயர்த்திக் கொள்ளாமல் இருந்தால் அவர் சோம்பேறியாவார். அவரது விருப்பமும் எண்ணமும் பலவீனமானவையாகும். சோம்பாலான மனிதன் ஒருபோதும் அறிவின் பாதையைக் கண்டு கொள்ளமாட்டான்”. “விலங்கினத்திலிருந்து மனிதனைப் பிரிப்பது மொழியாகும்”. இம்மாதிரி பல கூற்றுக்களைச் சொல்லியிருப்பவர் பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர்.








All the contents on this site are copyrighted ©.