2011-10-26 16:15:52

அருள்தந்தை Tentorioவின் அடக்கச் சடங்கில் 15000க்கும் அதிகமான விசுவாசிகள்


அக்.26,2011. அருள்தந்தை Fausto Tentorioவைக் கொலை செய்தவர்கள் தங்கள் குற்றங்களுக்கு வருந்தி மனம் திரும்புவதையே தாய் திருச்சபை விரும்புகிறதென்று பிலிப்பின்ஸ் ஆயர் ஒருவர் கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டில் அக்டோபர் 17 அன்று கொலை செய்யப்பட்ட மறைபணியாளர் Fausto Tentorioவின் அடக்கச்சடங்கை இச்செவ்வாயன்று முன்னின்று நடத்திய Kidapawan மறைமாவட்ட ஆயர் Romulo de la Cruz, அருள்தந்தை Tentorio பழங்குடியினர் மத்தியில் மேற்கொண்ட இந்த அன்புப்பணி தொடரும் என்றும், அருள்தந்தையின் சாட்சிய மரணத்தால் பிலிப்பின்ஸ் தலத்திருச்சபை இன்னும் உறுதி பெறும் என்றும் கூறினார்.
அருள்தந்தை Tentorioவின் அடக்கச் சடங்கில் ஆறு ஆயர்கள், நூற்றுக்கணக்கான குருக்கள் மற்றும் 15,000க்கும் அதிகமான விசுவாசிகள் கலந்து கொண்டனர் என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இதற்கிடையே, அருள்தந்தையின் கொலையில் இராணுவத்தினர் சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், இக்கொலை வழக்கை பாராளுமன்ற அளவில் விசாரிக்க வேண்டும் என்று "Bayan Muna" என்ற மக்கள் உரிமைகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
புதிய அரசுத் தலைவர் Benigno Aquino 2010ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றதிலிருந்து இதுவரை தீர்க்கப்படாத மர்மக் கொலைகள் 54 நிகழ்ந்துள்ளன என்று FIDES செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.