2011-10-26 16:15:26

அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கோவில் ஒன்று பெங்களூரில் திறக்கப்பட்டது


அக்.26,2011. இந்தியாவிற்கென நியமனம் பெற்றுள்ள திருப்பீடத்தூதர் பேராயர் Salvatore Pennacchio பெங்களூரில் இச்செவ்வாயன்று அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கோவில் ஒன்றைத் திறந்தார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் பெயரால் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள இந்த முதல் கோவிலை பேராயர் Pennacchio திறந்து வைத்த இந்த விழாவில், கர்நாடகாவில் பணி புரியும் 13 ஆயர்களும் கலந்து கொண்டனர். அருளாளர் இரண்டாம் ஜான்பாலின் திரு உருவம் ஒன்றும் இவ்விழாவின் போது திறந்து வைக்கப்பட்டது.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் கர்நாடகா கத்தோலிக்கர்களுக்கும், பெங்களூர் விசுவாசிகளுக்கும் கிடைத்த ஒரு பெரும் வரம் என்று பெங்களூர் பேராயர் Bernard Moras கூறினார்.
அஞ்ச வேண்டாம் என்று அருளாளர் இரண்டாம் ஜான்பால் தன் மறையுரைகளில் அடிக்கடி கூறி வந்ததை மக்களுக்கு மீண்டும் நினைவு படுத்திய திருப்பீடத்தூதர் பேராயர் Pennacchio, கர்நாடகாவில் தற்போது நிகழும் பல வன்முறைகளின் நடுவே அஞ்சாமல் வாழ அருளாளர் தன் பரிந்துரையால் விசுவாசிகளைக் காப்பார் என்று கூறினார்.
அருளாளர் இரண்டாம் ஜான் பால் 1986ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட பொது, மங்களூர் சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.