2011-10-26 16:16:36

2009ம் ஆண்டு வலம்வந்த 16 இலட்சம் கோடி டாலர் சட்டத்திற்குப் புறம்பான 'அழுக்குப்பணம்'


அக்.26,2011. 2009ம் ஆண்டில் மட்டும் உலகின் பல குற்றவாளிகள் 1.6 ட்ரில்லியன், அதாவது, 16 இலட்சம் கோடி டாலர்களுக்கு ஈடான பணத்தை உலகச் சந்தையில் உலவ விட்டுள்ளனர் என்றும், இந்தத் தொகையில் சட்டத்திற்கு புறம்பான போதைப் பொருள் வர்த்தகமே பெரியத் தொகை என்றும் ஐ.நா.வெளியிட்டுள்ள ஓர் புதிய அறிக்கை கூறுகிறது.
2009ம் ஆண்டில் உலகின் அனைத்து நாடுகளின் உற்பத்தி அளவீட்டில் இந்த 16 இலட்சம் கோடி டாலர்கள் கணிசமான ஒரு தொகை என்று ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றப் பிரிவு என்ற அலுவலகம் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
‘சட்டத்திற்குப் புறம்பான பணப்புழக்கம்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உலகின் பல நாடுகளில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் பணப்புழக்கத்தின் மதிப்பு 21 இலட்சம் கோடி டாலர்கள் என்றும், இவற்றில் ஒரு விழுக்காடு பணமே அரசு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பான இந்த 'அழுக்குப்பணம்' இலஞ்சம் கொடுப்பது, தீவிர வாத அமைப்புக்களை ஆதரிப்பது ஆகியவற்றில் பெரும்பாலும் செலவிடப்படுகிறது என்பதையும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
உலகில் 2009ம் ஆண்டு வலம்வந்த இந்த 16 இலட்சம் கோடி டாலர் 'அழுக்குப் பணத்தில்' 84 ஆயிரம் கோடி டாலர்கள் Cocaine என்றழைக்கப்படும் போதைப் பொருள் வர்த்தகத்தில் மட்டுமே ஈட்டப்பட்ட இலாபம் என்று இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.