2011-10-25 16:06:39

விவிலியத்தேடல்: திருப்பாடல் 90 பாகம் - 2


RealAudioMP3 மனிதனால்
பூமிக்கும் பிற கோள்களுக்கும் இடையே உள்ள தூரத்தைக் கணக்கிட முடிகிறது.
விண்மீன்கள் பயணிக்கும் வேகத்தை துல்லியமாகக் கணக்கிட முடிகிறது.
ஓலியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடிகிறது.
நீரின் அடர்த்தியைத் துல்லியமாகக் கணக்கிட முடிகிறது.
கடலின் ஆழத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடிகிறது.
உலக நாடுகளின் பரப்பளவை துல்லியமாகக் கணக்கிட முடிகிறது.
இப்படி எல்லாவற்றையும் துல்லியமாகக் கணக்கிட முடிகின்ற மனிதனுக்குத் தன்னுடைய வாழ்நாள் இவ்வளவுதான் எனக் கணக்கிட முடிகிறதா? அன்பர்களே! நமது வாழ்நாள் எவ்வளவு எனக் கணக்கிட முடியவில்லையே என்று என்றைக்காவது நீங்கள் சிந்தித்ததுண்டா?. எல்லோருடைய வாழ்க்கையைப் பற்றி ஆருடம் சொல்லும் சகோதரர்களுக்கு அவர்களுடைய வாழ்நாளை கணக்கிட முடிகிறதா?

நாம் வாங்குகின்ற உணவுப்பொருட்களாக இருக்கட்டும் அல்லது தினமும் உடுத்துகின்ற ஆடைகளாக இருக்கட்டும் ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம் என அதன் வாழ்நாட்களை துல்லியமாகக் கணக்கிடுகின்ற நமக்கு நமது வாழ்நாட்களை கணக்கிட முடிகின்றதா? நாம் பயன்படுத்துகிற பொருட்களுக்கு வாழ்நாளைக் கணக்கிட முடிகின்ற நமக்கு நமது வாழ்நாளைக் கணக்கிடத் தெரியாதது சற்று வேடிக்கையான உண்மை.
இவ்வுண்மை நமக்கு நினைவுபடுத்துவது ஒன்றே ஒன்றுதான். மனிதன் குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டவன். எல்லாம் வல்லவன் அல்ல. 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பது போல, மனிதனால் முடிந்தது கொஞ்சம்தான், முடியாதது உலகளவு என்றால் மிகையாகாது.
இறைவன் மட்டும் எல்லாம் வல்லவர் என உணரவும், மனிதன் எல்லாம் வல்லவன் அல்ல மாறாக குறிப்பிட்ட வரம்புகுட்பட்டவன் என உணர்ந்து, தன்னைப் போல பிறரும் குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டவர்கள் என புரிந்து ஏற்றுக் கொண்டு வாழவும் திருப்பாடல் 90 நம்மை அழைக்கிறது.

அன்பார்ந்தவர்களே, கடந்த வாரம் 90வது திருப்பாடலின் பின்புலம் மற்றும் எழுதப்பட்டச் சூழலை சிந்தித்தோம். கானான் நாட்டை நோக்கி தந்தையாம் இறைவன் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தினார். தேவையான சமயங்களிலெல்லாம் பல்வேறு அதிசயங்களைச் செய்து அவர்களை அற்புதமாக வழிநடத்தினார். இருப்பினும் கூட கானான் நாட்டினரை வெல்லமுடியாது நாம் மடிந்து போவோம் என்று தவறாக உளவு சொன்னதைக் கேட்டவுடன் எகிப்திற்கு திரும்ப முடிவு செய்ததை கடந்த வாரம் கேட்டோம்.

இன்று இத்திருப்பாடலிலே வெளிப்படும் இஸ்ரயேல் மக்களின் மனநிலையை சிந்தித்து, அதோடு நமது மனநிலையையும் ஒப்பிட்டு பார்க்க உங்களை அழைக்கிறேன். இதோ இத்திருப்பாடலின் சுருக்கம்: எங்கள் வாழ்நாட்கள் குறைந்து விட்டன, எங்களது வாழ்நாட்களை கணக்கிடக்கூட தெரியவில்லை, முடியவில்லை. நாங்கள் பாவம் செய்தோம் எனவே நீர் சினம் கொண்டீர். எனவே எங்களை ஒடுக்கிவிட்டீர். ஆண்டவரே போதும் இனி எங்கள் மேல் இரக்கம் வையும்.
திருப்பாடல் 90: 7 மற்றும் 9வது சொற்றொடர்கள்:
உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகிறோம்: உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்.
எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன: எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்து விட்டன.

நீர் அன்றும் இன்றும் என்றும் வாழ்பவர். எல்லாம் வல்லவர் என்பதை தாங்கள் புரிந்து கொண்டோம். இனி நாங்கள் பாவம் செய்ய மாட்டோம்; எங்கள் மேல் இரக்கம் வையும் என்று செபிக்கின்றனர்.
திருப்பாடல் 90: ஓன்று, இரண்டு மற்றும் பதினைந்தாவது சொற்றொடர்:
என் தலைவரே தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.
மலைகள் தோன்றும் முன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே ஊழிஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே.
எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக எம்மை மகிழச்செய்யும்.

அன்பார்ந்தவர்களே! இதுதான் இத்திருப்பாடல் வெளிப்படுத்தும் இஸ்ரயேல் மக்களின் மனநிலை. இஸ்ரயேல் மக்களின் இந்த மனநிலையோடு நமது மனநிலையை உரசிப் பார்ப்போம். நமது மனநிலை எப்படி இருக்கிறது?
சில சமயங்களில் எல்லாம் தெரிந்தவர் போலத்தான் நமது மனநிலை இருக்கிறது. நமக்கு எல்லாம் தெரியும், ஆனால் பிறருக்கு எதுவும் தெரியாது என்ற மனநிலை காணப்படுகிறது. என்னால் எதுவும் முடியும், ஆனால் பிறரால் முடியாது என்ற மனநிலையும் காணப்படுகிறது.
சிலர் இது கூடவா தெரியாது? இதை இப்படி செய்திருக்கலாமே? அதை அப்படி செய்திருக்கலாமே? என எதற்கெடுத்தாலும் நான்கு, ஐந்து மாற்றுவழிகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

எனக்குத் தெரிந்த இரண்டு உடன்பிறந்த சகோதரர்கள். பெரியவர் - பிழைக்கத் தெரிந்த மனிதர். அதிகம் படிக்கவில்லையென்றாலும் நன்கு விவரமானவர். நன்கு சம்பாதிக்க வேண்டும், நான்கு பேர் மதிக்குமாறு நன்கு வாழ வேண்டும் என விரும்புவர், அதற்கேற்றவாறும் வாழ்பவர்.
ஆனால் சின்னவரோ அவ்வளவாக விவரம் இல்;லாதவர். எதை, எப்படி செய்ய வேண்டும் என அதிகம் யோசிக்காதவர். வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து வாழ்பவரல்ல.
சின்னவர் என்ன செய்தாலும் பெரியவர் ஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பார். இதை இப்படி செய்திருக்கலாமே? அதை அப்படி செய்திருக்கலாமே? என எதற்கெடுத்தாலும் நான்கு, ஐந்து மாற்றுவழிகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் அவையனைத்துமே நியாயமானவைகளாகவும் இருக்கும்.
இருவருக்கும் திருமணம் முடிந்து இரு மகன்களைப் பெற்றெடுத்தனர். பெரிய அளவில் இல்லையென்றாலும் சின்னவர், மனைவி மற்றும் மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். ஆனால் பெரியவரோ மனைவியுடன் ஏற்பட்ட மனவருத்தத்தால் மனைவி மற்றும் மகன்களை கடந்த எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை அப்படி செய்திருக்கலாமே? இதை இப்படி செய்திருக்கலாமே? என எதற்கெடுத்தாலும் நான்கு, ஐந்து மாற்றுவழிகளை சொல்லிக்கொண்டிருந்த மனிதருக்கு தனது மனைவியுடன் ஏற்பட்ட மனவருத்தத்தை சரி செய்து வாழத்தெரியவில்லை.
எனக்கு எல்லாம் தெரியும் முடியும் என வாழத்தெரிந்த மனிதனுக்கு வரம்பு இருக்கிறது என்று சொல்ல இதை விட வேறு உதாரணம் கொடுக்கத் தேவையில்லை.

நன்கு பாடத்தெரிந்தவருக்கு நடனமாடத் தெரியாமலிருக்கலாம், நன்கு நடனமாடத் தெரிந்தவருக்கு நன்கு பாடத் தெரியாமலிருக்கலாம். அல்லது இரண்டும் தெரிந்தவருக்கு நல்ல பேச்சுத்தறன் இல்லாமல் இருக்கலாம். எனவே மனிதன் என்பவன் குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டவன்.
அன்பார்ந்தவர்களே! நமக்கு வாய்ப்பு கிடைத்தது. நமக்கு கிடைத்த வாய்ப்பினால் அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்தால்தான் நம்மால் நன்றாக செய்ய முடிகிறது. அனுபவம் இல்லையெனில் நாமும் அறியாமையில்தான் இருப்போம் என்பதை மறந்து விடுகிறோம்.

குருமடத்திலே படித்துக் கொண்டிருந்த போது தினசரி காலை, மாலை என எங்களுக்கென வேலைகள் இருக்கும். ஒரு நாள் என்னோடு வேலை செய்ய வேண்டிய சகோதரர் வரவில்லை. நானாகவே அன்றைய வேலைகளை முடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து அவரைப் பார்த்து ஏன் வரவில்லை? எனக் கேட்டேன். அதற்கு அவர், மன்னிக்கவும் நான் மறந்து விட்டேன். அதோடு எனக்கு இன்று வேலை இல்லை என நினைத்து விட்டேன் என்றார். அதெப்படி மறக்கும், மற்றதெல்லாம் மறக்காமல் இருக்கிறாயல்லவா? என அவரோடு வாக்குவாதம் செய்தேன். அவர் மறந்து விட்டேன் என்று சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எப்படி மறக்கும் என்பது தான் என் வாதமாக இருந்தது. கடந்த மாதம் முழுவதும் ஒரு திருத்தலத்திலே பணியாற்றச் சென்றிருந்தேன். நான் செய்ய வேண்டியது என்ன என்று நேரம், நாள், பணி என அட்டவணை தந்திருந்தார்கள். ஒருநாள் நான் செய்ய வேண்டிய முக்கியமான வேலையை சுத்தமாக மறந்துவிட்டேன். அப்போது அந்த சகோதரரோடு பல ஆண்டுகளுக்கு முன்பு அது எப்படி மறப்பாய்? என நான் வாதம் செய்தது நினைவுக்கு வந்தது. மறதி என்பது நமது வரம்பை மீறிய ஒன்றாகும். வரம்புக்குட்பட்டவனிடமிருந்து வரம்புக்கு மீறி எதிர்பார்ப்பது சரியல்ல.

சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு மனிதனின் வேலை நேரம் 8 மணி நேரம். அந்த வரம்பை மீறும் போது அது சட்டப்படி குற்றமாகும். அதே போலத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாவற்றிலுமே குறிப்பிட்ட வரம்பு உள்ளது. அந்த வரம்பை மீறி எதிர்பார்ப்பதும் தவறானதே.
தான் மட்டுமே PERFECT என்று நினைப்பவர்கள் மற்றவர்களை ஒதுக்குகிறார்கள். காலப்போக்கில் மற்றவர்களும் அவர்களிடமிருந்து ஒதுங்குகிறார்கள். இதன் விளைவாகத் தனித்தீவு போல தனிமையில் வாழ்கின்றனர். தனித்தீவு வாழ்க்கை மனிதனின் மகிழ்ச்சியைப் பறித்துவிடுகின்றது.
எனவே அன்பார்ந்தவர்களே! இறைவன் மட்டுமே எல்லாம் வல்லவர். நாமும், நம்மைப்போன்ற சகமனிதர்களும் குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டவர்கள் என நினைவுபடுத்திக் கொள்வோம். எல்லாரையும் அவரவரது குறைகளோடு ஏற்றுக் கொள்வோம். இதுவே இத்திருப்பாடல் நமக்கு இன்று சொல்லித் தருகின்ற பாடம்.








All the contents on this site are copyrighted ©.