2011-10-25 16:02:32

பிலிப்பின்ஸ் நாட்டில் கொலையுண்ட அருள்பணியாளரின் வழக்கு தீர விசாரிக்கப்பட வேண்டும் - ஆயர் பேரவை


அக்.25,2011. இம்மாதம் 17ம் தேதி பிலிப்பின்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட்ட அயல்நாட்டுப் பணிகள் பாப்பிறை கழகத்தின் அருள்பணியாளர் Fausto Tentorioவின் கொலை குறித்த வழக்கில் பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர் நேரடியாகத் தலையிட்டுத் தீர்க்க வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் பேரவை அரசுத் தலைவர் Aquinoவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கடவுள் பணியிலும், பிறரன்புப் பணியிலும் ஈடுபட்டிருக்கும் நல்லவர்களை எவ்வித தயக்கமும் இல்லாமல் கொல்லும் போக்கு பிலிப்பின்ஸ் நாட்டில் அதிகரித்து வருவது குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள் அவையின் தலைவர் ஆயர் Nereo Odchimar, அரசு இந்தக் கொலை வழக்கை அனைத்து கோணங்களில் இருந்தும் முழுமையாக ஆராய வேண்டும் என்றும், வழக்கமாகக் கூறும் சாக்கு போக்குகள் இந்த வழக்கில் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்திக் கூறினார்.
கொலை செய்யப்பட்ட குருவின் உடல் இத்திங்களன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, Kidapawan நகரில் உள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டது என்றும், இச்செவ்வாயன்று அருள்தந்தை Fausto Tentorioவுக்கு இறுதி மரியாதைகள் செய்யப்பட்டன என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.