2011-10-25 15:57:03

இந்தியாவின் மதத் தலைவர்கள் - அசிசி நகர் அமைதி நாள் கூட்டத்தைப் போன்ற முயற்சிகளால் உலகில் அமைதி வளர வாய்ப்புண்டு


அக்.25,2011. இவ்வியாழனன்று இத்தாலியின் அசிசி நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள அமைதி நாள் கூட்டத்தைப் போன்ற முயற்சிகளால் உலகில் அமைதியும், மனித நேயமும் வளர வாய்ப்புண்டு என்று இந்தியாவின் மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
உண்மைக்கும், நீதிக்கும் தங்களையே அர்ப்பணித்துள்ள பல உலகத் தலைவர்களை அசிசி நகர் கூட்டத்திற்குத் திருத்தந்தை அழைத்திருப்பது உலக அமைதியை நிலைநாட்ட அவர் காட்டும் அரியதொரு எடுத்துக்காட்டு என்று இந்தியாவில் இருந்து இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கும் சுவாமி அக்னிவேஷ் கூறினார்.
உலகின் பல்சமயத் தலைவர்கள் 200 பேருக்கும் அதிகமானோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு பெற்றுள்ளனர்.
உலகமயமாக்கல் கொள்கைகள் எவ்வகையில் கடவுள், மனிதம், உண்மை, மற்றும் நீதிக்கு முற்றிலும் முரணானவை என்பதை தான் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தவிருப்பதாக சுவாமி அக்னிவேஷ் மேலும் கூறினார்.
பல்வேறு மதங்களும் ஒருங்கிணைந்து செய்திகளை அனுப்ப முயலும்போதுதான் உலகில் நல்ல மாற்றங்கள் உருவாக வழி பிறக்கும் என்றும், அசிசி அமைதி நாள் போன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு சாதனங்கள் முக்கியத்துவம் தராமல் இருப்பது வருத்தத்தைத் தருகிறதென்றும் சமண மதத்தின் பிரதிநிதியாக அசிசி செல்லும் Sadhvi Sadhana கூறினார்.








All the contents on this site are copyrighted ©.