2011-10-25 16:03:44

அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் ஓவியக் கண்காட்சி


அக்.25,2011. அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் 45 ஓவியங்கள் கொண்ட ஒரு கண்காட்சி கொல்கத்தாவில் இத்திங்களன்று நிறைவு பெற்றது. அன்னை தெரேசா பிறந்த 101வது ஆண்டைச் சிறப்பிக்கும் வண்ணம் அமைந்திருந்த இந்த ஓவியக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாய் நடைபெற்றது.
கடந்த 50 ஆண்டுகள் உருவாக்கப்பட்ட இந்த ஓவியங்களை வரைந்த Ritu Singh என்ற பெண்மணி, அன்னை தெரேசாவுடன் மிக நெருங்கியத் தொடர்பு கொண்டவர்.
இவரது தாய் அன்னைத் தெரேசாவுடன் ஏழைகள் பணியில் ஈடுபடச் சென்ற வேளைகளில் சிறுமியாக இருந்த Ritu Singh அன்னையின் இல்லத்தில் நாள் முழுவதையும் கழித்தபோது, அங்கு தன் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார் என்று கூறியுள்ளார்.
'வாருங்கள் என் ஒளியாய் இருங்கள்' என்ற தலைப்பில் ஓவியர் Ritu Singhஆல் வரையப்பட்ட அன்னை தெரேசாவின் ஓவியம் 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அன்னை அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டபோது, அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.