2011-10-24 15:58:17

அக்டோபர் 24 வாழ்ந்தவர் வழியில்..... புனித அந்தோணி மரிய கிளாரட்


புனித அந்தோணி மரிய கிளாரட், கிளேரீசியன் எனப்படும் அமல மரியின் மறைப்போதப் புதல்வர்கள் துறவு சபையை நிறுவியவர். இவர் 1806ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இஸ்பெயினின் சல்லியந்து நகரில் துணி நெய்யும் குடும்பத்தில் பிறந்தார். இவர், தனது தந்தையின் தொழிலைச் செய்து கொண்டிருக்கும் போதே, ஓய்வு நேரங்களில் இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கற்றார். ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவராய், 28 வது வயதில் குருவானார். ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த இவர், 1847 ம் ஆண்டு ஒரு சில அருட்பணியாளர்களோடு சேர்ந்து கத்தோலிக்க அச்சகம் ஒன்றை நிறுவினார். அவர் எண்ணற்ற புத்தகங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார். அக்காலக் கட்டத்தில் இஸ்பெயினில் அரசியல் வன்முறைகள் அதிகரிக்க அதிகரிக்க கிளாரட்டின் வாழ்க்கைக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் 14 மாதங்கள் கனேரியத் தீவுகளில் அவர் பணிசெய்து வந்தார். கனேரியத் தீவுகளில் அவரின் பணி சிறந்த பயனை அளித்தது. இருந்தும் அவர் இஸ்பெயினுக்கே மீண்டும் சென்று தனது பணியைத் தொடர விரும்பினார். மீண்டும் திரும்பி 1949ம் ஆண்டு ஜூலை 16 ம் நாள் ஐந்து அருட்பணியாளர்களோடு சேர்ந்து இன்று கிளேரீசியன் சபையாக விளங்கும் அமல மரியின் மறைப்போதக புதல்வர்கள் துறவு சபையை நிறுவினார். பார்செலோனாவில் மிகப்பெரும் சமய நூலகம் ஒன்றை நிறுவினார். இது இன்று கிளாரட் நூலகம் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பழைய கத்தோலிக்க நூல்கள் பலவற்றை மிகக் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிட்டார். கர்த்தூசியன் சபையிலும் இயேசு சபையிலும் இவர் சேர முயன்ற போது கடுமையான நோய் அதற்குத் தடங்கலாக இருந்தது. இவர் இறையன்பை, முக்கியமாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வெளிப்படுத்தியவர். புனித அந்தோணி மரிய கிளாரட், 1870ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.