2011-10-22 14:55:50

திருச்சபைக்கு மூன்று புதிய புனிதர்கள்


அக்.22,2011. அருளாளர்கள் குய்தோ மரிய கொன்ஃபோர்த்தி, லூயிஜி குவனெல்லா, போனிஃபாசியா ரொட்ரிக்கெஸ் தெ காஸ்த்ரோ ஆகியோரை புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு காலை பத்து மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிகழ்த்தும் திருப்பலியில் இம்மூன்று அருளாளர்களையும் புனிதர்கள் என அறிவிப்பார் திருத்தந்தை.
இத்தாலியின் பார்மா ஆயராகப் பணியாற்றிய அருளாளர் குய்தோ மரிய கொன்ஃபோர்த்தி, 1895ம் ஆண்டில் “சவேரியன் மறைபோதகர்கள்” என அழைக்கப்படும் வெளிநாட்டு மறைபோதக சவேரியார் சபையை ஆரம்பித்தவர். மறைபோதக அருட்பணியாளர் ஒன்றியம் தொடங்கவும் உதவிய இவர், மறைப்பணி ஆர்வத்தை அதிகம் ஊக்குவித்தவர்.
“ஏழைகளின் தந்தை” என அழைக்கப்படும் இத்தாலியரான அருட்பணி லூயிஜி குவனெல்லா, பிறரன்புப் பணியாளர் ஆண்கள் சபையையும் புனித மரியின் இறைபராமரிப்பு பெண்கள் சபையையும் தொடங்கியவர். இந்தியா உட்பட ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களில் இச்சபையினர் பணியாற்றுகின்றனர்.
இஸ்பெயினின் சாலமங்காவில் பிறந்த அருளாளர் போனிஃபாசியா ரொட்ரிக்கெஸ் தெ காஸ்த்ரோ, புனித வளன் பணியாளர் பெண்கள் சபையைத் தொடங்கியவர். நற்செய்தி விழுமியங்களுக்கு வீரத்துவமான சான்று பகர்ந்தவர். பெண்களின் மாண்பு காக்கப்படுவதற்கு உழைத்தவர்.







All the contents on this site are copyrighted ©.