2011-10-22 14:52:33

இராணுவத்தில் இருப்போருக்கு ஆன்மீக வழிகாட்டுதல் அவசியம் - திருத்தந்தை


அக்.22,2011. இராணுவத்தில் பணி செய்வோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதல் அவசியம் என்பதை, இராணுவத்தினருக்கு மேய்ப்புப்பணி செய்பவர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இராணுவத்தினருக்கு மேய்ப்புப்பணி செய்பவர்களின் ஆறாவது சர்வதேச கருத்தரங்கு மற்றும் இந்த ஆன்மீக வழிகாட்டிகளுக்கான 3வது சர்வதேசப் பயிற்சிப் பாசறையில் கலந்து கொண்ட சுமார் எண்பது பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
நிலநடுக்கம், வெள்ளம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அகதிகளுக்குப் படைவீரர்கள் ஆற்றும் அன்புப் பணிகள், நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் அவர்களது பணிகள், போர்களில் அவர்கள் செய்வது ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்த வீரர்கள் பலரது விசுவாசம் ஆழமானது என்றும் அவர்கள் அமைதியை ஊக்குவிக்க விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
இப்படைவீரர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதும் திருவருட்சாதனங்களை நிறைவேற்றுவதும் ஆன்மீக வழிகாட்டிகளின் கடமை என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
படைவீரர்களின் ஆன்மீக நலன் குறித்த அருளாளர் பாப்பிறை 2ம் ஜான் பால் அவர்களின் அப்போஸ்தலிக்க மடல் வெளியிடப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறும் இந்நேரத்தில் இச்சர்வதேச கருத்தரங்கு நடைபெறுவதையும் அவர் குறிப்பிட்டார்.
அருளாளர் பாப்பிறை 2ம் ஜான் பாலின் திருவிழா, அக்டோபர் 22, இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டது. அக்டோபர் 22 அவர் பாப்பிறையாகப் பொறுப்பேற்ற நாளாகும்.







All the contents on this site are copyrighted ©.