2011-10-21 16:00:41

உலகம் ஒரு மனிதனின் இறப்பைக் கொண்டாடவில்லை – கர்தினால் டர்க்சன்


அக்.21,2011. கடாஃபியின் இறப்பு குறித்துப் பேசிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், உலகம் ஒரு மனிதனின் இறப்பையோ அல்லது ஒரு குற்றவாளியின் இறப்பையோ ஒருபோதும் கொண்டாட முடியாது என்று கூறினார்.
லிபியாவிற்கும் வட ஆப்ரிக்காவின் பிற பகுதிகளுக்கும் தேவையானது சில தலைவர்களிடமிருந்து மட்டும் விடுதலை அல்ல, மாறாக சிறுபான்மைக் கிறிஸ்தவர்கள் உட்பட அனைவருக்கும் சுதந்திரம் தேவையாக இருக்கின்றது என்று கர்தினால் டர்க்சன் மேலும் கூறினார்.
சதாம் ஹூசேன் தூக்கில் போடப்பட்டபோது ஈராக்கில் நடந்தது போல, தற்போது லிபியாவிலும், கடாஃபியின் இறப்புக்காக வருந்துகிறவர்கள் இருப்பதால், அந்நாட்டிற்கு ஒப்புரவு அவசியம் என்றும், ஆப்ரிக்கக் கர்தினாலாகிய டர்க்சன் வலியுறுத்தினார்.
இன்னும், ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும், லிபியாவில் போரிடும் தரப்புகள் ஆயுதங்களைக் கைவிட்டு ஒன்றிணைந்து அமைதியான முறையில் நாட்டைக் கட்டி எழுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.