2011-10-20 14:18:43

திருப்பீடத்திலிருந்து தீபாவளி வாழ்த்து செய்தி


அக் 20, 2011. வரும் வாரம் 26ம்தேதி இந்து மதத்தவரால் சிறப்பிக்கப்படும் தீபாவளிப் பெருவிழாவை முன்னிட்டு திருச்சபையின் வாழ்த்துக்களை வெளியிட்டு செய்தி அனுப்பியுள்ளார் திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran.
அனைத்து ஒளியின் ஆதாரமாக இருக்கும் இறைவன், அமைதியும் வளமும் நிறைந்த ஒரு வாழ்வுக்கென நம் இதயங்களையும் வீடுகளையும் சமுதாயங்களையும் ஒளிர்விப்பாராக என அச்செய்தியில் கூறியுள்ள கர்தினால், இவ்வாண்டின் இவ்விழாவிற்கான செய்தியாக 'மத விடுதலை' என்பது எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மதத்தின் அடிப்படையில் முன்சார்பு எண்ணங்கள், பகைப்பிரச்சாரங்கள், பாகுபாட்டுடன் நடத்தப்படல், சித்ரவதை செய்தல் போன்றவைகளுக்கு மனித சமூகம் உள்ளாக்கப்படும் நிலையில், மதம் தொடர்புடைய மோதல்களுக்கானத் தீர்வாக மத விடுதலையே இருக்க முடியும் என்கிறது இச்செய்தி.
மனித மாண்பில் தன் மூலத்தைக் கொண்டிருக்கும் அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்றாக இருக்கும் மத சுதந்திரம் மறுக்கப்படும்போது அல்லது பாதிக்கப்படும்போது, ஏனைய அனைத்து மனித உரிமைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன எனவும் கூறுகிறது கர்தினால் தவ்ரான் வழங்கியுள்ள இவ்வாழ்த்துச் செய்தி.
மத சுதந்திரம் என்பது ஒருவர் தன் மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறிச்செல்வதையும் உள்ளடக்குகின்றது என்பதையும் இச்செய்தி வலியுறுத்தி கூறுகின்றது.
மதசுதந்திரம் என்பது மதிக்கப்படும்போது அது, நாட்டின் வளர்ச்சிக்காக அனைவருடன் ஒன்றிணைந்து உழைப்பதற்கான ஊக்கத்தையும் தருகிறது எனக்கூறும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தீபாவளி வாழ்த்துச் செய்தி, இம்மாதம் 27ம் தேதி திருந்தந்தையும் அனைத்து மதப்பிரதிநிதிகளும் அசிசியில் கூடி உலக அமைதிக்காகச் செபிக்க உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.