2011-10-19 14:59:28

அசிசி நகரில் நடைபெறும் அகில உலக அமைதி கூட்டத்திற்கு மத நம்பிக்கையற்றவர்களுக்கும் திருத்தந்தையின் அழைப்பு


அக்.19,2011. அக்டோபர் 27ம் தேதி இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறும் அகில உலக அமைதிக் கூட்டத்திற்கு முதல் முறையாக, மத நம்பிக்கையற்றவர்களையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைத்துள்ளார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
பல்வேறு சமயங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இதுவரை இக்கூட்டத்திற்கு அழைப்பு பெற்று வந்தனர் என்றும், இவ்வாண்டு முதல் முறையாக சமய நம்பிக்கை இல்லாதவர்களையும் திருத்தந்தை அழைத்திருப்பதற்கு முக்கிய காரணம், மத நம்பிக்கை அற்றவர்களும் உலக அமைதியை விரும்புகின்றனர் என்பதைத் தெளிவுபடுத்தவே என்றும் பாப்பிறை கலாச்சாரக் கழகத்தின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Melchor Jose Sanchez கூறினார்.
திருத்தந்தை விடுத்துள்ள இந்த சிறப்பு அழைப்பை பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த மொழியியலாளர், இத்தாலி மற்றும் மெக்சிகோ நாடுகளின் மெய்யியலாளர்கள் ஆகியோர் இதுவரை ஏற்றுள்ளனர்.
அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களின் ஐம்பதுக்கும் மேலான நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இவ்வமைதிக் கூட்டத்தில் திருத்தந்தை ஒரு சிறப்பு உரையாற்றுவார் என்றும், திருத்தந்தையும், அனைத்து பிரதிநிதிகளும் இணைந்து உலக அமைதிக்கு உழைக்கும் தங்கள் அர்ப்பணத்தைப் புதுப்பித்துக் கொள்வார்கள் என்றும் வத்திக்கான் செய்தி ஒன்று கூறியுள்ளது.









All the contents on this site are copyrighted ©.