2011-10-18 15:27:23

விவிலியத்
தேடல் திருப்பாடல் 90


RealAudioMP3 மிகப் பெரிய அரசியல் பிரமுகர் ஒருவர் கோயிலுக்கு வருகிறார். அங்கு வழிபாடு நடக்கிறது. ஆனால் அந்த வழிபாட்டிலே அவர் கவனம் செலுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை கவனித்த ஒருவர் “கோயிலுக்கு வந்துவிட்டு இப்படி சாமி கும்பிடாமல் வேடிக்கை பார்க்கிறீர்களே” என்று கேட்கிறார். “நான் ஒன்றும் சாமி கும்பிட வரவில்லை. வாரத்தில் ஒரு நாள் நான் கோயிலுக்கு போகவில்லையெனில் சீக்கிரம் இறந்து விடுவேன் என ஜோசியக்காரன் சொல்லிட்டான் அதனால் தான் நான் கோயிலுக்கு வந்தேன் இல்லையெனில் நான் ஏன் இந்த சாமியை பார்க்க வரப் போகிறேன்” என்று சொன்னார்.
அன்பு நெஞ்சங்களே நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 90. இந்த திருப்பாடலின் பின்புலம், எழுதப்பட்ட சூழல் ஆகியவை மிக பயனள்ள கருத்துக்களை நமக்குச் சொல்லித் தருகிறது. இறையன்பு என்பது பயத்தினால் வருவது அல்ல என்பதை ஆழமாகச் சொல்லி, நமது இறையன்பு எப்படிப்பட்டது என சிந்திக்க அழைக்கிறது.
இந்தத் திருப்பாடல் மோசேவினுடைய செபம் என சொல்லப்படுகிறது. இந்தத் திருப்பாடல் எழுதப்பட்ட சூழலை அறிய, பழைய ஏற்பாட்டு எண்ணிக்கை நூல் 13 மற்றும் 14ம் பிரிவுகள் நமக்கு உதவுகின்றன. தந்தையாம் இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்த கானான் நாட்டை உளவு பார்த்து வருவதற்கு ஒரு குழு அனுப்பப்படுகிறது. உளவு பார்த்து வந்தவர்கள் இரு வேறு கருத்துகளைச் சொல்கின்றனர். யோசுவாவும் காலேபும் பாலும் தேனும் பொழிவதாக சொல்கின்றனர். மற்றவர்கள் அந்நாட்டு மக்கள் நெடியவர்கள், வலிமைமிக்கவர்கள், நம்மால் அவர்களை வெல்ல முடியாது என்று முற்றிலும் மாறுபட்ட கருத்தை சொல்கின்றனர். இதைக் கேட்ட மக்கள் தந்தையாம் இறைவனுக்கு எதிராக பேசி அவர்களுக்கு ஒரு தலைவனை ஏற்படுத்தி மீண்டும் எகிப்திற்கு திரும்ப முடிவு செய்கின்றனர்.
உடனே தந்தையாம் இறைவன் “என்னை நம்பாமல் எகிப்துக்கு திரும்ப நினைத்த இவர்கள் யாருமே நான் வாக்களித்த கானான் நாட்டை பார்க்க போவதில்லை. பாலும் தேனும் பொழிவதாக உண்மையை சொன்ன யோசுவாவும் காலேபும் மட்டும் இதற்கு விதிவிலக்கு” என்று சொன்னார். அதோடு, தவறாக உளவு சொன்ன பத்து பேரையும் வாதையால் மாண்டு போகச்செய்கிறார். இதைப் பார்த்த மக்கள் பயந்து போய் அடுத்த நாள் காலையிலே கானான் நாடு நோக்கி பயணிக்க முயலுகின்றனர். இதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் 90:7 மற்றும் 9ம் சொற்றொடர்களிலே குறிப்பிடுகின்றார்.
உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகிறோம்: உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்.
எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன: எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்து விட்டன.
உளவு செய்தியைக் கேட்டு இறைவனுக்கு எதிராக முணுமுணுத்தவர்கள் இப்போது இறைவன் பத்து பேரை வாதையால் அழித்ததும் பயந்து போய் மீண்டுமாக தந்தையாம் இறைவன் சொன்ன வழியில் செல்ல முடிவெடுக்கின்றனர்.

இன்று தந்தையாம் இறைவனைப் பற்றி நம்முடைய பார்வை என்ன? தந்தையாம் இறைவன் நமக்கு யார் என கேட்டால், நமது பதில் என்னவாக இருக்கும்? நான் நவதுறவகத்தில் இருந்த போது ஒரு நாள் எங்கள் நவதுறவகத் தந்தை “கடவுள் உனக்கு யார்?” என்று எங்கள் ஒவ்வொருவரையும் கேட்டார். அதற்கு கடவுள் எனக்கு நண்பர், சகோதரர், அப்பா என பல்வேறு விதமான பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தோம். ஒரு சகோதரர் “கடவுள் எனக்கு ஒரு சலவைத் தொழிலாளி” என்றார். ஏன் என்று கேட்டதற்கு, “அவர் என் பாவங்களையெல்லாம் கழுவி சுத்தப்படுத்துகிறார்” என்று சொன்னார். ஆனால் அன்பார்ந்தவர்களே உண்மையில் கடவுள் நம் நண்பர், சகோதரர், அப்பா என நாம் உணர்கிறோமோ என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியானால் உண்மை நிலை என்ன?
பெரும்பாலும் தந்தையாம் இறைவன் ஒரு நீதிமான். நாம் செய்த தவறுகளுக்கு சரியாக தண்டனை வழங்குகின்ற ஒரு நீதிபதி. எனவே தண்டிப்பார் என்ற சிந்தனை மிகப்பரவலாக காணப்படுகிறது. இதன் விளைவு - நாம் நினைத்தது நடக்காது போது, இறைழனை அவதூறாகப் பேசுகிறோம். ஆனால், அதன் பிறகு தண்டித்து விடுவாரோ என பயந்து போய் மன்னிப்பு கேட்கிறோம். என்ன தான் ஒப்புரவு அருள்சாதனம் பெற்றாலும் அங்கு சொல்ல மறந்த பாவங்கள் எப்போதாவது நினைவுக்கு வரும்போதெல்லாம், அய்யோ இறைவன் இந்த செயலுக்காக தண்டித்து விடுவாரோ என பயந்து நடுங்குவதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஏனெனில் இறைவன் கண்டிப்பான நீதிபதி. எனவே நிச்சயமாக தண்டிப்பார் என்ற எண்ணமே இந்த பயத்திற்கு அடிப்படைக் காரணம். எப்படி தண்டிப்பார் எவ்வளவு தண்டிப்பார் என்னும் பயமே தந்தையாம் இறைவனிடமிருந்து வெகுதூரத்திற்கு நம்மை இட்டுச் சென்றுவிடுகிறது. இதைத் தான் 90: 11 நமக்கு சொல்கின்றது. உமது சினத்தின் வலிமையை உணர்பவர் எவர்?

அடுத்ததாக, தந்தையாம் இறைவன் நாம் கேட்பதையெல்லாம் கொடுக்கும் அன்புத் தந்தை. நாம் கேட்போம் அவர் கொடுப்பார். நாம் இறைவனோடு கொண்டிருக்கிற உறவு பெரும்பாலும் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது.
அடுத்ததாக, தந்தையாம் இறைவன் எல்லாம் வல்லவர். புனிதமானவர். நாம் இந்த பாவப்பட்ட உலகத்தில் பிறந்த பாவப்பட்டவர்கள் என்று சொல்லி இறைவனுக்கும் நமக்கும் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிடுகின்ற நிலையும் காணப்படுகிறது.
எனவே இறைவனை அன்பு செய்வது என்பதே இல்லாமல் போய் விடுகிறது. இறையன்பு, பக்தி என்பதெல்லாம் பெரும்பாலும் நமது பயத்தினால் வருவதாகத்தான் இருக்கிறது.

ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக தந்தையாம் இறைவனை தன் சொந்த தந்தையாக உளமாற அன்பு செய்தவர் தான் புனித குழந்தை தெரேசா. அவர் பிறந்த போது பிரான்ஸ் நாடு போரில் தோல்வியுற்றிருந்தது. பிரான்ஸ் நாட்டு மக்களின் பாவ வாழ்க்கைக்குத் தண்டனையாக இறைவன் அவர்களைத் தோல்வியுறச் செய்துவிட்டதாக கருதினர். எனவே, அவர்கள் பார்வையில் தந்தையாம் இறைவன் சரியான தீர்ப்பு வழங்குகிற நீதிமான். இத்தகையச் சூழலில் வாழ்ந்தாலும், குழந்தை தெரேசா அவரது தந்தையின் அன்பு மற்றும் சகோதரிகளின் அன்பினால் உண்மை அன்பின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு தந்தையாம் இறைவனை தன் சொந்த தந்தையாக உளமாற அன்பு செய்தார். இதற்காகவே அவர் இன்று திருச்சபையில் மறைவல்லுனராகப் போற்றப்படுகிறார்.
துறவிகளின் வாழ்விலே நித்திய வார்த்தைப்பாடு என்பது மிகப் பெரிய கொண்டாட்டம். அந்த நாளிலே தாய் தந்தை உடன் பிறந்தோர் உறவினர்கள் உடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால் புனித குழந்தை தெரசாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை. அதைப் பற்றி தன்னுடைய சுயசரிதையில் எழுதும்போது, “உண்மையிலேயே எங்கள் வானகத்தந்தையே என்ற செபத்தை சொல்லும் போது எனக்கு இருப்பது ஒரே தந்தை நீர் தான் என நான் தைரியமாக சொல்லத்தான் இப்படி செய்தீரோ?” எனக்குறிப்பிடுகிறார் இப்புனிதை. இது ஒன்றே நமக்கு சொல்லும் புனித குழந்தை தெரேசா தந்தையாம் இறைவனை எவ்வளவு உளமாற நேசித்தார் என்று.

தந்தையாம் இறைவன் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் பல்வேறு கொடைகளைப் பொழிந்து வருகிறார். அப்படிப்பட்ட தந்தையாம் இறைவனை நாம் ஏன் தொலைவில் வைத்துப் பார்க்க வேண்டும்? நம் வாழ்க்கை முழுவதும் நாம் செய்த தவறுகளையெல்லாம் மன்னித்து வழிநடத்துகின்றவருக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்? புனித குழந்தை தெரசாவைப் போன்று, அவரை நமது சொந்தத் தந்தையாக உளமாற அன்பு செய்வதுதான் சரி.
பயத்தினால் வருகின்ற பக்தி அந்த பயம் போனதும் காற்றில் பறந்து விடும். இறைவன் கேட்பதை கொடுக்கிறார் என்பதால் வருகின்ற பக்தியும் நம் தேவைகள் பூர்த்தியானதும் பறந்து விடும். ஆனால் உண்மையான அன்பினால் வருகின்ற பக்தி மட்டும்தான் எப்போதுமே மாறதது.

தந்தையாம் இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் ஒரு போதும் பயத்தை எதிர் பார்க்கவில்லை. அவர் அவர்களை முழுமையாக அன்பு செய்தார். அவர்கள் அவரை நம்பாமல் பலமுறை ஓடினாலும், அவர்களை மன்னித்து அன்பு செய்பவராகத்தான் விவிலியம் நமக்குச் சொல்லித் தருகிறது. விவிலியம் சில நேரங்களில் தண்டிக்கின்ற கடவுளை பழைய ஏற்பாட்டிலே நம் கண்முன் நிறுத்தினாலும், தந்தையாம் இறைவன் இரக்கம் மிகுந்த தந்தை என்பதை இறைமகன் இயேசு ஆணித்தரமாக வலியுறுத்துவதாகத்தான் புதிய ஏற்பாடு நமக்குச் சொல்கிறது.
எந்த ஒரு நல்ல தந்தையுமே தன் பிள்ளை தனக்கு பயப்பட வேண்டும்; அந்த பயத்தினால் நல்லவனாக வாழ வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. மாறாக அன்பின் மிகுதியில் தந்தையைப் பார்த்துதும் ஓடிவந்து கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார். தந்தையாம் இறைவன் ஒரு நீதிபதி என்று நம் மனதிலே இருக்கும் பழைய உருவை தூக்கி எறிவோம். ஊதாரி மைந்தனுக்காகக் காத்திருக்கும் அன்புத் தந்தையின் உருவை நம் இதயத்திற்குள் அலங்கரிப்போம். இதுவே திருப்பாடல் 90 நமக்குச் சொல்லித்தரும் பாடம்.








All the contents on this site are copyrighted ©.