2011-10-18 15:00:18

மக்கள் போராட்டத்தால் கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் முடக்கம்


அக்.18,2011. தமிழகத்தின் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கான பணிகள் தற்காலிகமாக முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அணு உலைகள் அமைவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள், பல்வேறு சாலைத் தடைகளை அமைத்துள்ளதால், ஆலைக்குள் பணியாளர்கள் வரமுடியாத நிலை இருப்பதாக கூடங்குளம் அணு மின் திட்டத்தின் இயக்குனர் பாலாஜி BBCயிடம் தெரிவித்தார்.
சாதாரணமாக 4 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும், அணுமின் உற்பத்தித் துறையைச் சேர்ந்த 600 முதல் 800 பேரும் தினந்தோறும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், ஆனால் தற்போது ஏற்கனவே ஆலைக்குள் சென்ற 100 பேரைத் தவிர வேறு யாரும் அந்த வளாகத்துக்குள் இல்லை என்றும் பாலாஜி தெரிவித்தார்.
அங்கே பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடந்து வருவதாகவும், போராட்டம் தொடர்ந்தால் முதல் அணு உலையை வரும் டிசம்பரில் துவக்க முடியாமல் போகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானின் ஃபுக்கோஷிமா விபத்துக்குப் பிறகு அணுஉலை தொடர்பான அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில் மற்ற சில நாடுகளைப் பின்பற்றி இந்தியாவும் அணுஉலைகளை மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் அச்சங்களைப் போக்கும்வரை அணுமின் நிலையத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அமைச்சரவை நிறைவேற்றியுள்ளதென ஊடகங்கள் கூறுகின்றன.
அணுஉலைப் பாதுகாப்பு குறித்து தனிப்பட்ட முறையில் உறுதி செய்யப்படும்வரை புதிய உலைகளுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என்று கோரி, ஒய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பொதுநல வழக்கொன்றை தொடுத்துள்ளனர். நாட்டின் பிற இடங்களிலும் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.